குப்பைக் கிடங்கில் 5 மணி நேரமாக எரியும் தீ: புகையால் புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதி மக்கள் அவதி

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி குருமாம்பேட் குப்பை கிடங்கில் ஏற்பட்டுள்ள திடீர் தீவிபத்தின் காரணமாக எழுந்த புகையால் தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வந்தும் 5 மணி நேரத்துக்கும் மேலாக தீ எரிவதால் புகை மண்டலமாகியுள்ளது.

புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் 24 ஏக்கர் பரப்பளவில் புதுச்சேரி அரசின் குப்பைக் கிடங்கு உள்ளது. நகரம், கிராமம் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். இங்கு திடீரென்று இன்று மதியம் தீவிபத்து ஏற்பட்டது.

இரவு 7 மணியைத் தாண்டியும் தீயை அணைக்க முடியவில்லை. 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. குப்பை புகையால் அப்பகுதி முழுக்க புகை மண்டலமானது.

நாள்தோறும் சுமார் 300 டன் அளவில் புதுச்சேரி நகரப் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இங்கே கொட்டப்பட்டு வருகின்றன. இதன் அருகே பாண்லே பால்பண்ணை, கால்நடை மருத்துவமனை உள்ளது.

பாண்லே பால் இங்கிருந்து நகரம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. இக்குப்பை கிடங்கைச் சுற்றி ஐயங்குட்டிப்பாளையம், குரும்பாபேட், பெரம்பை, கோபாலன்கடை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிறியோர் முதல் வயதானோர் வரை பலரும் மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி மட்டுமில்லாமல் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், “இந்த கிடங்கில் தினமும் சுமார் 300 டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதன் தாக்கத்தால், காற்றும் நீரும் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறோம். இதில் தீவிபத்து ஏற்பட்டு மூச்சு விடவும் சிரமமாகவுள்ளது.

பலரும் ஏழை மக்கள்தான் இங்கு வசிக்கிறோம். குப்பை கழிவுகளாலும் மாசாலும் வாழ முடியாத நிலையில் உள்ளோம். சாப்பாடு சாப்பிடவே முடியாத அளவுக்கு ஈ பிரச்சினையும் உள்ளது. குவியும் குப்பை அளவை குறைக்க கொளுத்தி விடும் சம்பவங்களும் உண்டு. இதுபோல் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்க கோரியுள்ளோம்” என்றனர். தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE