காங்கிரஸுக்கு நெல்லையை ஒதுக்க வேண்டும்: திமுகவை வலியுறுத்தி தீர்மானம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸுக்குஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருநெல்வேலி கிழக்கு, மாநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி அருகே செங்குளத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமை வகித்தார். ‘மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பழனி நாடார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் செல்வப் பெருந்தகை கூறியதாவது: "இத்தேர்தல் தேசத்தின் 2-ம் சுதந்திரப் போர் ஆகும். தமிழகத்தை பிரதமர் மோடி ஓரம் கட்டி வஞ்சித்து வருகிறார். தமிழக மக்கள் ஒரு போதும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றாந் தாய் மனப் பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் நோட்டாவை விட மோசமாக பாஜக உள்ளது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE