புதுச்சேரி | புதிய அமைச்சராக திருமுருகன் நியமனம்: 4 மாதங்களுக்குப் பிறகு ஒப்புதல்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் 4 மாதங்களாக காலியாக இருந்த அமைச்சர் பதவி நிரப்பப்படவுள்ளது. புதுச்சேரி அமைச்சராக திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார்.

புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் மாஹே, ஏனாமில் தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளனர். காரைக்கால் பிராந்தியத்தில் 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் சந்திர பிரியங்கா. என்.ஆர். காங் எம்எல்ஏவான இவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி 4 மாதங்களாகியும், புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இதனால் தங்கள் பிராந்தியம் ஒதுக்கப்படுவதாக காரைக்கால் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்திருந்தது. குறிப்பிட்ட அமைச்சர் நீக்கப்படும் தருணத்தில், அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘நான் சாதி ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதால். அவர் வகித்த துறைகளுக்கு புதிய அமைச்சர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. காரைக்கால் தரப்பில் இருந்து என்.ஆர்.காங்கிரஸுக்கு திருமுருகன், சந்திரபிரியங்கா ஆகிய இரு எம்எல்ஏக்கள் உள்ளனர். காரைக்காலுக்கு முக்கியத்துவம் கொடுக்க திருமுருகனுக்கு அமைச்சர் பதவி தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த வேறு சிலர் பட்டியலின பிரதிநிதித்துவம் அடிப்படையில் தங்களுக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், 4 மாதங்களாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே நிலை தொடர்ந்தது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் காரைக்கால் தரப்பில் இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இந்து தமிழில் இன்று செய்தி வெளியானது. பாஜக போட்டியிடவுள்ள சூழலில் இது காரைக்காலில் வாக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உள்துறை இணைச்செயலர் அசுதோஷ் அக்னிஹோத்ரி வெளியிட்ட உத்தரவில், “புதுச்சேரி அமைச்சராக திருமுருகனை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்துள்ளார். அவர் அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இது அமலுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா நீக்கப்பட்ட பிறகு தேர்தல் அறிவிக்கப்படவுள்ள சூழலில் 4 மாதங்களுக்கு பிறகு காரைக்கால் பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த திருமுருகன் நியமிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, ஆளுநர் தமிழிசை தெலங்கானாவில் உள்ளார். அவர் புதுச்சேரி வரும் தேதியைப்பொறுத்து அமைச்சராக பொறுப்பு ஏற்கும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE