மதுரை நகரில் பொது இடங்களில் சுவரொட்டி, சுவர் விளம்பரத்துக்கு தடை

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரை நகரில் அரசின் பொது இடங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், பள்ளிச் சுவர்களில் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என நேற்று நடந்த பட்ஜெட் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் தினேஷ் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி, 2024 - 25-ம் ஆண்டுக்கான மாநகராட்சி வரவு, செலவுத் திட்டம் அடங்கிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேயர் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும், `எங்களுக்கு பட்ஜெட் புத்தகத்தை தராமல் நீங்கள் வாசித்தால் எப்படி புரிந்து கொள்வது?' என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மேயர், `நான் வாசித்து முடித்ததும் கவுன்சிலர்கள் அனைவருக் கும் பட்ஜெட் புத்தகம் வழங்கப்படும், தற்போதே வழங்கிவிட்டால், நான் வாசிப்பதை கவனிக்க மாட்டீர்கள், பட்ஜெட் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பீர்கள்,'’ என்றார். தொடர்ந்து அவர் பேசியதாவது: மதுரையின் வரலாற்றுத் தொன்மையை யும், இலக்கியச் செழுமையையும் ஆவணப்படுத்தும் விதமாகவும், அதே சமயம் வளர்ந்து வரும் புதிய தொழில் நுட்ப வளர்ச்சியையும் உள்வாங்கி மாநக ராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு: மதுரை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. வாகனப் போக்கு வரத்துக்கு ஏற்ப நகரில் 4,457 கி.மீ. தொலைவுக்கு சாலைகளைப் புதுப்பிக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உயர் கல்வி போட்டித் தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகளை பெற தனியார் பங்களிப்புடன் வழிகாட்டுதல் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

2022-23 கல்வி ஆண்டில் 3 மாணவிகள் மருத்துவப் படிப்பிலும், ஒரு மாணவி பொறியியல் படிப்பிலும் சேர்ந்து படிக்கின்றனர். மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ( சிஎஸ்ஆர் ) மூலம் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர தூய்மைப் பணி: மாநகராட்சி சாலைகளைத் தூசியில்லாத சாலைகளாக மாற்ற புதிதாக 4 மண் கூட்டும் இயந்திரங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நகரை 24 மணி நேரமும் தூய்மையாக வைத்துக் கொள்ள இரவு நேர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மதுரை மக்களுக்குப் பொழுதுப் போக்கு வசதி ஏற்படுத்த ரூ.50 கோடி யில் வண்டியூர் கண்மாய் அழகு படுத்தப்படுகிறது. கீழமாரட் வீதியில் செயல்படும் வெங்காய மார்க்கெட் ரூ.10.30 கோடியில் மாட்டுத் தாவணி காய்கறி மார்க்கெட் அருகில் மாற்று வதற்கு தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

மாநகராட்சிக்குச் சொந்தமான பொது இடங்கள், பள்ளிகள், மாநகராட்சி அலு வலகங்களில் சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. 2016-2017-ம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருந்த ஒய்வூதியத் தொகை ரூ.43.51 கோடி 2023-2024-ம் ஆண்டில் முழுவதும் வழங்கப்பட்டு ஓய்வூதியர்களின் துயர் துடைக்கப்பட்டுள்ளது. இந்த 2024 - 25 நிதி ஆண்டில் வரவினங்களில் ரூ.695.07 கோடி சொந்த வருவாயாகவும், ரூ.474.45 கோடி அரசின் பல்வேறு திட்டங்களால் கிடைக்கும் மானியமாகவும், ரூ.126.55 கோடி திட்டங்களுக்கான கடனாகவும் என மொத்த மாநகராட்சி வருவாய் ரூ.1296.07 கோடியாக இருக்கும்.

செலவினங்களில் ரூ.468.05 கோடி பணியாளர்கள் மற்றும் நிர்வாகச் செலவினமாகவும், ரூ.671.53 கோடி மூலதனச் செலவினமாகவும், ரூ.139.22 கோடி இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவினமாகவும், ரூ.11.42 கோடி கடன் திரும்பச் செலுத்துதல் செலவினமாகவும் என மொத்தச் செலவினம் ரூ.1290.22 கோடி. அதனால், 2024-2025 பட்ஜெட் ரூ.5.8 கோடி உபரி பட்ஜெட்டாக அமைந்துள்ளது. இவ்வாறு மேயர் பட்ஜெட் உரையை வாசித்தார். மதுரை நகரில் பொது இடங்களில் சுவரொட்டிகள்,சுவர் விளம்பரம் செய்ய மாநகராட்சி விதித்துள்ள தடைக்குப் பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ள னர்.

பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்..!: மாநகராட்சி பழைய வார்டுகளில் 51.82 ச.கி.மீ. பரப்பில் உள்ள பாதாள சாக்கடைகள் தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்து சீரமைக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் பாதாள சாக்கடை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு கணினி மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

>> வரும் கல்வி ஆண்டு முதல் மருத்துவப் படிப்புக்குத் தேர்வாகும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும்.

>> அலுவலகக் கட்டிடங்கள் இல்லாத 23 கவுன்சிலர்களுக்கு புதிதாக கட்டப்பட உள்ளன.

>> மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வைஃபை வசதி அமைக்கப்படும்.

>> மாநகராட்சி 2011-ல் மக்கள்தொகை 14.68 லட்சமாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 18.72 லட்சமாக அதிகரித்துள்ளது.

அதிமுக பங்கேற்கவில்லை: இக்கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இது குறித்து அதிமுக எதிர்க்கட்சித் தலைவரான கவுன்சிலர் சோலை ராஜா கூறுகையில், ‘‘தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத் தேதி முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

அதனால், பட்ஜெட் கூட்டத் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், நாங்கள் வரமாட்டோம் என தெரிந்தே பட்ஜெட் கூட்டத்தை ஆர்ப்பாட்டம் நடந்த நாளில் நடத்தி உள்ளனர். மாநகராட்சி பட்ஜெட்டில், தமிழக பட்ஜெட்டில் அறிவித்த மாநிலத் திட்டங்களைக் கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். மதுரை நகர மேம்பாட்டுக்கு இந்த பட்ஜெட் எந்த வகையிலும் உதவாது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE