சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘நீங்கள் சாதாரண நபர் அல்ல. மாநிலத்தின் அமைச்சர். உங்கள் பேச்சு எந்த அளவுக்கு தாக்கம், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தினர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று பேசினார்.

இதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ஒன்றாக இணைக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19(1)(ஏ) மற்றும் பிரிவு 25 அளித்துள்ள கருத்து சுதந்திர உரிமையை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தற் போது பிரிவு 32-ன் கீழ் பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் (உதயநிதி ஸ்டாலின்) மனு தாக்கல் செய்துள்ளீர்கள். நீங்கள் ஒன்றும் சாதாரண நபர் அல்ல. ஒரு மாநிலத்தின் அமைச்சர். உங்கள் பேச்சு எந்த அளவுக்கு தாக்கம், பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்’’ என்றனர்.

உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, கருத்து சுதந்திரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் அர்னாப் கோஸ்வாமி, முகமது ஸுபைர், நூபுர் சர்மா ஆகியோரது முந்தைய வழக்குகளை சுட்டிக்காட்டி வாதிட்டார். ‘‘சனாதன தர்மம் தொடர்பான இந்த வழக்கை எதிர்கொள்ள மாட்டேன் என்று ஒருபோதும் கூறவில்லை.

பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக மாற்றி, நியாயமாக விசாரிக்க வேண்டும் என்றுதான் கோருகிறேன்’’ என்றார்.

இதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிப்பது தொடர்பான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE