சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது மனதை வலிக்கச் செய்கிறது என்று சென்னையில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டில் 4-வது முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார். விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கல்பாக்கம் சென்று, விரைவு ஈனுலையை தொடங்கி வைத்தார். பின்னர், ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார். பிறகு, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தாமரை’ மாநாட்டில் பங்கேற்பதற்காக, விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
விமான நிலைய சாலை, ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் என வழிநெடுகிலும் சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகத்துடன் கையசைத்தார். விமான நிலையம் முதல் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம் வரை சாலையின் இருபுறமும் பிரதமரை வரவேற்று பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. குறிப்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு வைக்கப்பட்டிருந்த ‘மக்கள் காவலன்’ என்ற பேனர் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை ஏற்றபடி, ஒய்எம்சிஏ மைதானத்துக்கு பிரதமர் வந்தடைந்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும், தமிழக மக்களால் உற்சாகம் அடைகிறேன். திறமை, வர்த்தகம், பாரம்பரியத்தின் மையமாக சென்னை மாநகரம் திகழ்கிறது. எனக்கும் தமிழகத்துக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ஆனால், சில ஆண்டுகளாக நான் தமிழகம் வரும்போதெல்லாம், சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. பாஜகவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான் இதற்கு காரணம்.
வளர்ந்த பாரதத்துடன், வளர்ந்த தமிழகமும் வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. சென்னையில் பல ஆயிரம் கோடி மதிப்பில் நகர்ப்புற திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழகத்தின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது.
ஆனால், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு,சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களது கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. புயல் வந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்வதற்கு பதிலாக துயரங்களையே திமுக அரசு அதிகப்படுத்தியது. திமுகவினர் வெள்ள மேலாண்மைக்கு பதிலாக ஊடக மேலாண்மை செய்தனர். தமிழக மக்கள், தமிழகம் மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை
நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றடைகிறது. இந்த பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல். இந்த விஷயத்தில் மொத்த குடும்பமும் பயங்கர எரிச்சலில் இருக்கிறது. உங்கள் எண்ணம் நிறைவேறாது. தமிழகத்தின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தையாரும் பறிக்க மோடி ஒருபோதும்விடமாட்டான். நீங்கள் ஏற்கெனவேஎடுத்த பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடி அளிக்கும் உத்தரவாதம்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள், குடும்ப வளர்ச்சிக்கே முன்னுரிமை தருகின்றன. மோடி சொல்வது, தேசத்துக்கே முன்னுரிமை. இதனால்தான் இண்டியா கூட்டணிகட்சியினர் என்னை வசைபாடுகின்றனர். ஆதரவற்றவர்கள், ஏழைகள் எல்லோருக்கும் சொந்தமானவன் இந்த மோடி. இந்த பாரதமே என் குடும்பம். அதனால்தான் இன்று தேசம் முழுவதும், ‘‘நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன்’’ என்று ஒரே குரலில் கூறுகிறது.
எனது உரையை முடிக்கும் முன்பாக, என் மனதை அரிக்கும் முக்கியமான கவலையை பகிர்ந்து கொள்கிறேன். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவுடன் போதை பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவது என் மனதை வலிக்கச் செய்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவை பலப்படுத்தினால், தமிழக எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடி தரும் உத்தரவாதம்.
வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு உருவானால்தான், வளர்ச்சி அடைந்த பாரதம் வலுப்படும். வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்கியே தீருவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
முன்னதாக, பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடிக்கு, பாஜக விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் பி செல்வம், நினைவு பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏழுமலை சுப்பிரமணி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டணி கட்சி தலைவர்களான தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், தலைவர் ரவி பச்சமுத்து, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், காமராஜர் மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago