முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை இலங்கை அனுப்ப விரைவு நடவடிக்கை: தமிழக அரசு கோரிக்கை @ ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை மத்திய அரசு விரைவாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாந்தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் இருக்கின்றனர். தங்களை இலங்கைக்குத் திரும்ப அனுப்பக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா என்பது குறித்து தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, மூன்று பேர் தொடர்பாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறிய நீதிபதிகள், மூவரும் தனியாக மனு தாக்கல் செய்தால் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE