“தமிழக வளர்ச்சி நிதியை கொள்ளை அடிக்க விடமாட்டேன்!” - பிரதமர் மோடி ‘உத்தரவாத’ பேச்சு @ சென்னை

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை யாரும் கொள்ளையடிக்க நான் விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் (திமுக) கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம் வசூலிக்கப்பட்டு, தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்” என்று சென்னையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, ‘வணக்கம் சென்னை’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அவரது உரையில் இருந்து: “ஒவ்வொரு முறை நான் சென்னைக்கு வரும்போது, இங்குள்ள தமிழர்களால் எனக்கு சக்தி உண்டாகிறது. உயிர்ப்பும், துடிப்பும் நிரம்பியிருக்கும் இந்த சென்னை நகருக்கு வருவது மிக இனிமையான அனுபவமாக இருக்கிறது.

திறமை, வர்த்தகம், பாரம்பரியம் ஆகியவற்றுக்கான அழியாப் புள்ளியாக சென்னை திகழ்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்கும் நமது நோக்கத்திலே, சென்னைவாசிகள் மிக முக்கியமானவர்களாக இருக்கின்றனர். எனக்கும் தமிழகத்துக்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. நீங்கள் என்மீது காட்டும் இந்த அன்பும்கூட மிகவும் பழமையானது.

ஆனால், இங்கே சில ஆண்டுகளாகவே, நான் தமிழகம் வரும்போது சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. வயிற்றிலே புளியைக் கரைக்கிறது. அதற்கு காரணம், பாஜகவுக்கு மக்கள் ஆதரவு தொடர்ந்து வலுவடைந்து வருவதுதான். இன்று சென்னையில் அதை தெளிவாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நெடுந்தொலைவுக்கு திரண்டிருக்கும் மக்கள் வெள்ளம் அதற்கு சாட்சியாக இருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

வளர்ச்சி அடைந்த பாரதத்தைப் போலவே, வளர்ச்சி அடைந்த தமிழகத்துக்கான உறுதிப்பாட்டையும் மேற்கொண்டிருக்கிறேன். நாம் மிக விரைவாக, பாரதத்தை உலகின் மூன்று தலைசிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக ஆக்க வேண்டும். இதில் தமிழகத்தின் சென்னையின் பங்களிப்பு மிகப் பெரியது. பாரத அரசு சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. மத்திய அரசின் மூலம், சென்னையில் ஆயிரக்கணக்கான மதிப்பீட்டிலான நகர்ப்புற கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கப்பட்டு இருக்கிற திட்டங்களின் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அது ஸ்மார்ட் நகரங்கள் திட்டம், குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்கான அம்ரித் திட்டம், சென்னை மெட்ரோ, சென்னை விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சென்னை மக்களின் மேம்பாட்டுக்காக நகர மக்களின் வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கான பல திட்டங்களை முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம். சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான சாலைத் திட்டத்துக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது.

ஒருபுறம் மத்திய அரசு தமிழகம் மற்றும் சென்னையின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது. மறுபுறம் மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு சென்னை மக்களின் தேவைகளை, அவர்களுடைய கனவுகளை கண்டுகொள்ளவே இல்லை. அண்மையில் சென்னையில் மிகப் பெரிய புயல் வந்தது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர். ஆனால், திமுக அரசு அவதிப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக, மக்களின் கவலையை மேலும் மேலும் அதிகரிக்கும் வேலையைத்தான் செய்திருக்கிறது.

திமுகவினர் பெருவெள்ள பெருந்துயர் காலத்தில், வெள்ளத்தடுப்பு மேலாண்மைப் பணிகளைச் செய்வதில்லை. மாறாக, ஊடக மேலாண்மையைச் செய்கின்றனர். ஊடகங்களைச் சரிகட்டுகிறார்கள். மக்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் நிரம்பிவிட்டது. ஆனால், திமுகவினர் பாலும் தேனும் ஓடுவதாகவும், வெள்ள நீர் எங்கும் ஓடவில்லை என்றும் பேட்டி அளிக்கின்றனர்.

திமுக அரசுக்கு மக்களின் துயரங்கள், துன்பங்கள் குறித்து சுத்தமாக அக்கறையும், கவலையும் இல்லை. தமிழக மக்களே, உங்களைப் பற்றியும் அவர்களுக்கு கவலையில்லை. தமிழகத்தைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை என்பது இதன்மூலம் நன்றாக தெரியவருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புரிந்துணர்வுகளின் அரசாங்கம். ஏழைகளின் நலனை கருத்தில்கொண்டு செயல்படும் மக்கள் அரசாங்கம். கரோனா பெருந்தொற்றின்போது, ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்க ஏழைகள் நலனில் அக்கறைக் கொண்ட நமது அரசு ஏற்பாடு செய்தது. தேசம் தனக்கான சொந்தமாக ஒரு தடுப்பூசியை உருவாக்கிய போது அனைவருக்கும் இந்த தடுப்பூசி, இலவசமாக கிடைக்க வேண்டும் என்று ஏழைகள் நலனில் அக்கறைக் கொண்ட நமது அரசாங்கம் தீர்மானித்தது.

தமிழகம் சிறு, குறு நடுத்தர தொழில் துறையில் முன்னணி மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வசதி அளித்தது.

மத்திய பாஜக அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் கச்சைக் கட்டிக் கொண்டு பணியாற்றி வருகிறது. இதற்காக, மத்திய அரசு பல திட்டங்களுக்கான தொகையை நேரடியாக பயனாளிகளக்கு அனுப்பி வருகிறது. லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவிலான ஆதாயங்கள், இப்போது நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக சென்றடைகிறது. இதுதான் திமுகவுக்கு மிகப் பெரிய வருத்தம். கழிவறை, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு, ரயில் வழித்தடங்கள், சாலைகள், இலவச காப்பீட்டுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் என அனைத்து துறைகளிலும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளுக்கான லட்சக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்க முடியாமல் இருக்கிறதே என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் பெரும் சிக்கல். இந்த விஷயத்தில் ஒரு குடும்பம் முழுவதுமே பயங்கரமான எரிச்சலில் இருக்கிறது. பணம்தான் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் அந்த திட்டத்தை நாங்கள்தான் செய்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம் என்று ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்கின்றனர். ஆனால், பாவம் அதிலும்கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

நான், திமுகவினருக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அளிக்கப்படும் பணத்தை கொள்ளையடிக்க விடமாட்டேன். எந்தப் பணத்தை நீங்கள் கொள்ளை அடிக்கிறீர்களோ, கொள்ளை அடித்திருக்கிறீர்களோ, அந்தப் பணம் வசூலிக்கப்பட்டு, தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும். இது மோடியின் உத்தரவாதம்.

குடும்ப அரசியல் பற்றி பேசும் கட்சிகள் தங்களது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. ஆனால், மோடி தேசத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயல்படுகிறேன். குடும்ப அரசியலைச் சேர்ந்த கட்சிகளின் ஆட்சியில், 18 ஆயிரம் கிராமங்களில் மின்சாரமே இருக்கவில்லை. நாட்டின் இரண்டரை கோடிக்கும் அதிகமான வீடுகளில் இருள் சூழந்திருந்தது.

21-ம் நூற்றாண்டின் பெரிய சவால் என்று கூறினால், அது எரிசக்தி பாதுகாப்புதான். மத்திய அரசு இந்த துறையில் மிக விரைவாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இன்று கல்பாக்கத்தில், தற்சார்பு எரிசக்தி துறையில் பாரதம் ஒரு சிறப்பான தொடக்கத்தை முன்னெடுத்திருக்கிறது. கல்பாக்கத்தில், விரைவு பெருக்கி உலை திட்டமானது மின் உற்பத்திக்காக வரலாற்று சிறப்பை கடந்திருக்கிறது. சில காலத்தில், இதன் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுவிடும். இத்திட்டத்தை தொடங்கி பணி செய்ய தொடங்கும்போது இத்திட்டத்தை தொடங்கிய உலகின் இரண்டாவது நாடாக இந்தியா மாறும். இந்த சாதனைக்காக நாட்டில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

2024-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. ஆனால், இந்த காலக்கட்டத்தில் பாரதம் எரிசக்தி துறையில் தேவைகளை நிறைவு செய்து கொள்வதில் பெரிய வீச்சில் செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்புதான், காக்ராபார் அணுசக்தி மையத்தில் நிறுவப்பட்டிருக்கும் 1400 மெ.வாட் திறன் கொண்ட 2 புதிய ஆலைகளை நாட்டிக்கு அர்ப்பணித்தேன்.

இன்று தெலங்கானாவின் 1600 மெ.வாட் தெர்மல் பவர் பிளாண்ட் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் 1,300 மெ.வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உ.பியில் 300 மெ.வாட் திறன் கொண்ட சூரிய மின்னாற்றல் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உ.பியில், 1,600 மெ.வாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ராஜஸ்தானிலும்கூட சூரிய சக்தி ஆலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உ.பியில், மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இமாச்சலில் புனல்மின் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் ராய்பூரில் 4ஜி எத்தனால் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உ.பி.யில் நொய்டாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறும் பசுமை ஹைட்ரஜன் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது கடந்த 50 நாட்களில் தொடங்கப்பட்டிருக்கும் சில பணிகளுக்கான பட்டியல் மட்டுமே.

மத்திய அரசின் சார்பில் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கு மின்சாரத்துக்கான கட்டணம் இருக்காது. நீங்கள் உங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் தகடுகளைப் பொருத்தினால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். உபரி மின்சாரத்தை அரசு வாங்கிக் கொள்ளும். அதிகப்படியான மின்சாரத்தை நீங்கள் விற்கலாம். அதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்த திட்டத்துக்காக 75,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படவிருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவை மின்சாரத்தில் தன்னிறைவுப் பெற்றதாக மாற்றும். இவற்றில் எல்லாம் தமிழகத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கும்.

திமுக - காங்கிரஸ் போன்ற கட்சிகள் மட்டும் அல்ல, இண்டியா கூட்டணியில் உள்ள மேலும் பல கட்சிகள், குடும்பத்துக்கே முதல் உரிமை என்று கூறுகின்றனர். ஆனால், நான் சொல்கிறேன் தேசத்துக்கே முதன்மை. எனவேதான், இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் என்னை வசைபட புதிய ஃபார்முலாவைக் கண்டுபிடித்துள்ளனர். மோடிக்கு குடும்பம் எல்லாம் கிடையாது. அதனால்தான் இப்படியெல்லாம் பேசுவதாக கூறி வருகிறார்கள்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள். நான் பதினாறு வயதில் வீட்டை துறந்து இந்த தேசத்துக்காக வெளியேறினேன். நீங்கள்தான் என் குடும்பம். நாட்டின் மக்கள்தான் என்னுடைய குடும்பத்தார். இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க நான் இரவுபகல் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றேன்.

காங்கிரஸ், திமுக மற்றும் இண்டியா கூட்டணியோடு இணைந்திருக்கும் கட்சிகள் ஊழலில் ஊறிப்போய் குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் கட்சிகள். இவர்களுக்கு இவர்களது குடும்பதான் எல்லாம். இண்டியா கூட்டணியின் ஊழல் தலைவர்களை அடைகாத்து பாதுகாக்கும் ஒரு தீர்மானத்தை இன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்குப் பிறகு, இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள், கப்பல் கவிழந்துவிட்டதுபோல தலையில் கைவைத்து உட்கார்ந்துள்ளனர். இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு லஞ்சம் வாங்குவதை தவிர, ஊழல் செய்வதை தவிர, தேசத்தின் அமைப்புகளை கெடுத்து குட்டிசுவராக்குவதைத் தவிர, வேறொன்றும் தெரியாது.

பல தசாப்தங்களாக இந்த இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் எல்லாம் இப்படிப்பட்ட அரசியல் மட்டுமே செய்து பழக்கமானவர்கள். இவர்களால்தான் நாட்டில் உள்ள இளைஞர்கள் அரசியலில் இருந்து விலகி உள்ளனர். இன்று வெளியாகியிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தூய்மையான அரசியலுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும். தூய்மைப்பணி என்பது எனது மனதுக்கு நெருக்கமானது.

குடும்ப அரசியலுக்கும் உழைப்புக்கும் மலைக்கு மடுவுக்கும் இடையிலான தூரம் இருக்கிறது. ஆகையால், குடும்ப அரசியல் என்பது அகங்காரம், மமதை, திமிர்தனத்தை வெளிப்படுத்துகிறது. குடும்ப அரசியல் வழிவந்த உறுப்பினர் ஒருவர், அதிகாரத்தின் மிக முக்கியப் பொறுப்பை பெறும்போது நாட்டையும், நாட்டு மக்களையும் அடிமைகளாக கருதுகிறார்கள். அவர்களது பதவிக்கான கண்ணியத்தையும், மரியாதையும்கூட அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

உச்ச நீதிமன்றம் திமுகவின் அமைச்சர் ஒருவரிடம் கடுமையான வினாக்களை எழுப்பியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி, காலில்போட்டு மிதிப்பதும் கூட குடும்ப அரசியல் நடத்துபவர்களின் லட்சியம் அடையாளம்.

ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் ஆதரவில் தமிழகத்தில், போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் கிடைத்து வருகிறது. இதுதான் எனது மனதை அரித்தெடுக்கும் கவலையாக இருந்து வருகிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் கட்சியைக் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாளைய தலைமுறையும் இந்த போதைப் பொருட்களால் பாதிக்கப்படும். இது அபாயத்தின் அறிகுறி. நீங்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால், தமிழகத்தின் எதிரிகள் மீதான நடவடிக்கை மேலும் விரைவுபடுத்தப்படும். இது மோடியின் உத்தரவாதம்" என்று பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஒரு பேய் ஆட்சி செய்தால் அந்த நாடு எப்படியிருக்கும் என்பதற்கு இன்றைய திமுகவின் ஆட்சியே சாட்சி. கொள்ளை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை, கஞ்சா விற்பவர்களுக்குதான் தமிழகத்தில் தற்போது முதல் மரியாதை கிடைக்கிறது" என்று பேசினார். | முழுமையாக வாசிக்க > “பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி!” - அண்ணாமலை சாடல்

இந்தக் கூட்டத்தில் வரவேற்புரை ஆற்றிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "நமது குடும்பம் மோடி குடும்பம்" என்று முழக்கமிட்டார். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களும் அதை திரும்பக் கூறி அரங்கை அதிரவைத்தனர். | விரிவாக வாசிக்க > சென்னை பாஜக பொதுக் கூட்டத்தில் ‘நமது குடும்பம் மோடி குடும்பம்’ முழக்கம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்