“தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.4,000 செலவு” - ஓசூரில் குடிநீர் பிரச்சினையால் மக்கள் தவிப்பு

By கி.ஜெயகாந்தன்

கிருஷ்ணகிரி: “தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், ரூ.600-க்கு விற்பனை செய்த ஒரு டிராக்டர் தண்ணீர் தற்போது ரூ.1,000 வரை உயர்ந்துள்ளது. மாதம் 4 முறை வாங்க வேண்டி உள்ளதால், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது. குடிநீர் கேன் ஒருநாளைக்கு ரூ.30 என மாதம் ரூ.900 செலவாகிறது. மொத்தம் தண்ணீருக்காக 4 ஆயிரம் ரூபாய் செலவாகிறது” என ஓசூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் தற்போது கோடைக்கு முன்னரே கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் தண்ணீரியின்றி காலிக்குடங்களுடன் தண்ணீரை தேடி அலைகின்றனர்.

அதேபோல் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஓசூர் நகர் பகுதியில் தொழிற்சாலைகளில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கோடைக்கு முன்னரே தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இது குறித்து ஓசூர் பகுதி மக்கள் கூறும்போது, “ஓசூர் மாநகராட்சியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் தண்ணீர் பிரச்சினை உள்ள நிலையில் தற்போது, கோடை காலம் தொடங்கும் முன்னரே கடும் வெயில் வாட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகள் மற்றும் ஆழ்த்துளை கிணறுகளில் தண்ணீர் வற்ற தொடங்கி உள்ளதால், நகர் பகுதி முழுவதும் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டிராக்டரில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால், ரூ.600-க்கு விற்பனை செய்த ஒரு டிராக்டர் தண்ணீர் தற்போது ரூ.1000 வரை உயர்ந்துள்ளது. மாதம் 4 முறை வாங்க வேண்டி உள்ளதால், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீருக்கு மட்டும் மாதம் ரூ.3 ஆயிரம் வரை செலவாகிறது.

குடிநீர் கேன் ஒருநாளைக்கு ரூ.30 என மாதம் ரூ.900 செலவாகிறது. மொத்தம் தண்ணீருக்காக 4 ஆயிரம் செலவாகிறது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் உரிமையாளர்கள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த சொல்கின்றனர். வீட்டிற்கு உறவினர்கள் வரக்கூடாது எனவும், தண்ணீருக்கு மாதம் கூடுதலாக ரூ.300- 500 வரை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதனால் நடுத்தர மக்கள் மற்றும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்கும் நிலை உள்ளதால் பல்வேறு பணிகளுக்கும், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள் சிரமடைந்துள்ளனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளை ஆய்வு செய்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். அதிக விலைக்கு தண்ணீர் விற்பனை செய்வதையும் தடுக்க வேண்டும்” என கூறினர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE