‘மோடியின் குடும்பம்’- லாலுவுக்கு பாஜக தலைவர்கள் எதிர்வினை: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக, பிரதமர் மோடியை ‘குடும்பம் அற்றவர்’ என்று விமர்சித்திருந்தார். இதனையடுத்து, இன்று (திங்கள்கிழமை) பாஜகவின் முக்கியத் தலைவர்கள் பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரத்தில் ‘மோடியின் குடும்பம்’ என்பதைச் சேர்த்துள்ளனர்.
அதுமட்டுமல்ல... ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மீதும் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார் பிரதமர் மோடி. அவருக்கு குழந்தைகளோ, குடும்பமோ ஏன் இல்லை என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்? பல குடும்பங்கள் அரசியலில் இருந்தால் அது குடும்ப ஆட்சியா? அது வாரிசு அரசியலா? மோடிக்கு குடும்பம் இல்லையென்றால் யார் என்ன செய்ய இயலும்?” என்று லாலு பேசியிருந்தார். இதனை வெகுவாக கண்டித்துள்ள பாஜக தலைவர்கள் பலரும், தங்களின் சமூக வலைதளப் பக்கங்களின் சுயவிவரத்தில் ‘மோடியின் குடும்பம்’ என்பதைச் சேர்த்துள்ளனர்.
லாலு பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி: தெலங்கானாவின் அடிலாபாத் நகரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இண்டியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தீவிரமான ஊழல்வாதிகளாகவும், குடும்ப ஆட்சி நடத்துபவர்களாகவும், தாஜா அரசியல் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தற்போது அச்சமடைந்திருக்கிறார்கள். அதனால்தான், நான் குடும்ப ஆட்சி என்ற கூறுவதை வைத்து மோடிக்கு குடும்பமே இல்லை என பேசுகிறார்கள்.
» “பேயாட்சிக்கு திமுக அரசே சாட்சி!” - அண்ணாமலை சாடல் @ பாஜக சென்னை பொதுக் கூட்டம்
» சென்னை பாஜக பொதுக் கூட்டத்தில் ‘நமது குடும்பம் மோடி குடும்பம்’ முழக்கம்!
எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்கள் 140 கோடி பேரும் எனது குடும்பத்தினர்தான். கோடிக்கணக்கான மகள்கள், அம்மாக்கள், சகோதரிகள் அனைவரும் மோடியின் குடும்பத்தவர்கள்தான். நாட்டின் ஒவ்வொரு ஏழையும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். யாருமே இல்லாதவர்கள்கூட அவர்களும் மோடிக்கு சொந்தமானவர்கள். அவர்கள் மோடி குடும்பம் என சொல்கிறார்கள்.
என்னைப் பற்றி நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். எனது ஒவ்வொரு செயலையும் அவர்கள் நன்கு அறிவார்கள். சில நேரங்களில் நான் நள்ளிரவைத் தாண்டியும் பணியாற்றிக் கொண்டிருந்தால் அதுவும் செய்தியாகிவிடுகிறது” என்று பிரதமர் மோடி பேசினார்.
“நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல!”- உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் காட்டம் சனாதனம் குறித்த அமைச்சரின் உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று உதயநிதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி விட்டு தற்போது பாதுகாப்பு கோரி நீங்கள் நீதிமன்றம் வந்துள்ளீர்கள். சனாதனம் தொடர்பாக நீங்கள் சொன்ன கருத்துகளின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர் அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்க வேண்டும். சொல்லும் கருத்துகளின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று அதிருப்தி வெளியிட்டது. மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
‘நீங்கள் நலமா?’- புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்: “அரசு செயல்படுத்தும் திட்டங்களின் பயன்கள் உரிய முறையில் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வதற்காக ‘நீங்கள் நலமா?’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி, “தமிழக மக்கள் ஒருபோதும் மோடியைப் பார்த்து ஏமாற மாட்டார்கள். தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் திராவிடல் மாடல் அரசின் பக்கமே மக்கள் நிற்பார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் ரூ.656 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும் புதிதாக கட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மீனவரை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை: அண்ணாமலை வலியுறுத்தல்: ‘திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக. உடனடியாக, மீனவர் ரமேஷைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் ரமேஷ், விழா மேடையிலேயே முதல்வர் ஸ்டாலினிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்துள்ளார்’ என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
‘நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க லஞ்சம் வாங்குவது குற்றமே’ : நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் வாங்கும் எம்.பி, எம்எல்ஏக்கள் தண்டனைக்குரியவர்கள் என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
1993-ல் மத்தியில் பிவி நரசிம்ம ராவ் தலைமையில் இருந்த ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 1998ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் தற்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.
1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். எனவே, 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இபிஎஸ் மன்னிப்பு கேட்காவிட்டால்... - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை: “எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் போதைப் பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், “ஐடி துறையினர் போதைப் பொருளை அதிகம் பயன்படுத்துவதாக பேசிய அவர், இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க கேட்கவில்லை என்றால் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
‘அதிமுக கூட்டணிக்கு வந்தால் கூடுதல் இடம்’ - விசிகவுக்கு அழைப்பு: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “திமுக கூட்டணியில் இழுபறி உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எங்கள் கூட்டணிக்கு வேறு ஏதேனும் கட்சிகள் வர விரும்பினால் வரலாம். வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். வந்தால் அவர்களுக்கு தான் லாபம். அதிமுக கூட்டணிக்கு வந்தால் கூடுதல் இடம் கிடைக்கும். நாங்கள் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கவில்லை. திமுக கூட்டணியில் அதிருப்தி இருந்தால் அதிமுகவுக்கு வரலாம்” என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் 18+ வயது ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ.1000: 2024- 2025-ஆம் ஆண்டுக்கான டெல்லி பட்ஜெட்டில் அம்மாநிலத்தில் 18 வயது நிரம்பிய தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். டெல்லியில் வாக்களிக்கும் உரிமை பெற்றவராக இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. அந்தப் பெண் அரசு ஊழியராகவோ அல்லது டெல்லி அரசின் வேறேதும் பென்ஷன் திட்டத்தின் பயனாளியாகவோ இருந்தால் அவரால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என்று பயனாளர்களுக்கான தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கேவுக்கு பின்னடைவு: ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் முதல் பாதி ஆட்டங்களை தவற விடலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
15 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago