புதுச்சேரி வேட்பாளர் யார்? - மத்திய அமைச்சருடன் முதல்வர் ரங்கசாமி சந்திப்பு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி வருகை தந்த மத்திய அமைச்சரை சந்தித்து முதல்வர் ரங்கசாமி உரையாடினார். புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் குறித்து ஆலோசித்தாக மேலிடப் பொறுப்பாளர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடுகிறது. இதை கூட்டணித் தலைவரான முதல்வர் ரங்கசாமியும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக தேர்தல் பணிகள் குறித்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் இன்று மதியம் நடைபெற்றது.

ராஜீவ்காந்தி சதுக்கம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்துகொண்டு, மத்திய அமைச்சர் மற்றும் மேலிடப் பார்வையாளரையும் சந்தித்துப் பேசினார். இக்கூட்டத்தில் பாஜக புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, கட்சியின் புதுவை மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்.பி., பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், எம்எல்ஏக்கள் சிவசங்கரன், கல்யாணசுந்தரம், அசோக்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கூறுகையில், "புதுவையில் மக்களவைத் தேர்தல் பணிகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டோம். மக்களவைத் தேர்தல் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்கு அனைத்து தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் சென்று வருகின்றனர்.

அதனடிப்படையிலேயே புதுவைக்கும் பிரகலாத் ஜோஷி வந்துள்ளார். அவர் முன்னிலையில் இதுவரை மேற்கொண்ட தேர்தல் பணிகள் மற்றும் வருங்காலத்தில் மேற்கொள்ளவுள்ள தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்தோம். புதுவை மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது குறித்து அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சிலர் குறித்து முதல்கட்டமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. இறுதியான ஆலோசனைக்குப் பிறகே போட்டியிடுபவர் குறித்து அறிவிக்க முடியும். மத்திய அமைச்சர் புதுவையில் போட்டியிடுவது குறித்து பேசப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

ஆலோசனை தொடர்பாக உயர் நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, "புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சராக இருப்போர் போட்டியிட பாதுகாப்பாக உள்ளதா என்று ஆலோசித்தோம். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அமைச்சராக உள்ளோர் கட்சி உத்தரவின்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதனால் இதுபற்றி முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE