செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை: அமலாக்கத் துறை பதில் மனு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சட்டப்படி விசாரணை நடத்திதான் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மோசடி குற்றத்தில் செந்தில்பாலாஜிக்கு பங்கு உள்ளதை பல நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தி உள்ளன. வழக்கின் முழுமையான சாட்சி விசாரணை நடத்தி சாட்சியம் பதிவு செய்தால் மட்டுமே அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் மதிப்பீடு செய்ய முடியும்.

செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. எனவே, தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.வழக்கின் விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை தயாராக உள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரணை செய்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணையை புதன்கிழமைக்கு (மார்ச் 6) தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE