மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்வு - பின்னணி ‘அரசியல்’

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், வார்டு கவுன்சிலர்களுக்கான மேம்பாட்டு நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக ஆக உயர்த்தி வழங்கப்படும் என மேயர் இந்திராணி அறிவித்தார். மேயரின் அறிவிப்பை கவுன்சிலர்கள் வரவேற்றுள்ளனர்.

தமிழகத்தில் நெல்லை, மதுரை உள்பட திமுக மாநகராட்சிகளில் மேயருக்கும், அவரது கட்சி கவுன்சிலர்களுக்குமே இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில், நெல்லை திமுக மேயருக்கு எதிராக அக்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், சமீபத்தில் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

நெல்லை மேயருக்கு எதிராக செயல்படும் திமுக கவுன்சிலர்களை அக்கட்சி தலைமையால் தற்போது வரை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, மதுரை மாநகராட்சியில் மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே இருந்து வந்த எதிர்ப்பு தற்போது கரைந்து போய் உள்ளது. எதிர்ப்பு கவுன்சிலர்களை கட்சித் தலைமை அழைத்து கண்டித்ததால் தற்போது ஒரளவு மேயருக்கு எதிராக பிரச்சினை செய்யாமல் அமைதியை கடைபிடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டாகவே மேயர் இந்திராணி தரப்பினர், பிரச்சினையை சுமுகமாக தீர்க்க திமுக கவுன்சிலர்களை மட்டுமில்லாது கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களையும் அரவணைத்து அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கவுன்சிலர்கள் வைக்கும் கோரிக்கைகளையும், சிபாரிசுகளையும் மேயர் தரப்பினர் முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றிக் கொடுப்பதாகவும், மாற்றுக் கட்சி கவுன்சிலர்களுடன் அணுசரணையாக சென்று, முக்கிய தீர்மானங்களையும் எதிர்ப்பு இல்லாமல் நிறைவேற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மேயர் இந்திராணி, கவுன்சிலர்களை மேலும் மகிழ்ச்சியடைய வைக்கும் வகையில், 2024 - 2025ம் ஆண்டு பட்ஜெட்டில் ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களுக்கும் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். மேயர் இந்த அறிவிப்பை வாசிக்கும் போது, அனைத்து கவுன்சிலர்களும் மேசையை தட்டியும், கை தட்டியும் அறிவிப்பை வரவேற்று ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து திமுக கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், "மாநகராட்சியில் திமுகவுக்கு 67 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் 50 சதவீதம் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர் தளபதி ஆதரவாளர்கள். வார்டுகளில் மக்கள் பணிக்காக மேயருடன் தற்போது அனுசரித்துப் போக தொடங்கியுள்ளனர்.

கட்சித் தலைமைக்கு பயந்து தற்போது வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. மேலும், மேயர் தரப்பினரும், நெல்லை மாநகராட்சியைப் போல் மதுரையிலும் நடக்காமல் இருக்க, திமுக கவுன்சிலர்களிடமும் அனுசரணையாக நடக்கத் தொடங்கி உள்ளனர். அதனாலே, மேயர் ரூ.10 லட்சமாக இருந்த வா்டு மேம்பாட்டு நிதியை தற்போது ரூ.25 லட்சமாக வாரி வழங்கியுள்ளார்" கூறினர்.

கவுன்சிலர்களுக்கு அறுசுவை விருந்து: பட்ஜெட் கூட்டம் முடிந்ததும், மேயர் இந்திராணி, அனைத்து கவுன்சிலர்களுக்கும் மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் சைவம், அசைவம் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இதில், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டனர். இந்த விருந்து ஏற்பாட்டால் மாநகராட்சி அலுவலகமே களைகட்டியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE