“இபிஎஸ் 2 நாட்களில் மன்னிப்பு கேட்காவிட்டால்...” - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை @ போதைப் பொருள் விவகாரம்

By க.ரமேஷ்

கடலூர்: “எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தமிழகத்தில் போதைப் பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். மேலும், “இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எடப்பாடி பழனிச்சாமி அரசியல் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தற்போது தமிழகத்தில் போதை பொருட்கள் உள்ளதாக போராட்டம் செய்கிறார். திமுகவின் நிதிநிலை அறிக்கையை தமிழகத்தில் அனைத்து மக்களும் வரவேற்றுள்ளனர். இந்திய அளவில் பாராட்டி பாராட்டுகின்றனர். இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்பட்டு வருகிறது.

அதிமுக ஆட்சியின் போதுதான் குஜராத் மாநிலத்தில் அதானி துறைமுகத்தில் 3,300 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை கண்டித்து அவர் போராட்டம் நடத்தவில்லை. போதைப் பொருளை இந்தியா முழுவதும் சப்ளை செய்வது பாஜகவினர்தான். அதிமுக ஆட்சியில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், ஆணையர் ஜார்ஜ், அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டவர்கள் மீது குட்கா வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ளது.

இவர்கள் மீது அப்போது கட்சி ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒருவர் செய்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் அதிமுக ஆட்சி காலத்தில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை வேடிக்கை பார்த்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் எந்தக் குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இப்போது போதைப் பொருள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஐடி துறையில் பணியாற்றுபவர்களுக்குதான் அதிக அளவில் போதை பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்துகிறார். இது ஐடி துறையில் உள்ளவர்கள் அனைவரையும் அசிங்கப்படுத்தும் வகையில் உள்ளது. தமிழகத்திலிருந்து தான் உலகம் முழுவதும் ஐடி துறையில் அதிகமானோர் பணியாற்றி வருகிறார்கள். எனவே, எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். கேட்கவில்லை என்றால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் தேர்தலின்போது 570 கோடி ரூபாய் கன்டெய்னரில் பறிமுதல் செய்யப்பட்டு சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் கூட்டணியை பிளவுபடுத்த அனைத்து வேலைகளையும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இது 2019-ல் கூடிய கூட்டணி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு மோடி முனிசிபாலிட்டி எலக்சனுக்கு (தேர்தலுக்கு) வருவது போல் வந்து செல்கிறார். அவருக்கு சூடு சொரணை இருந்தால் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை கூற வேண்டும். அப்பொழுதுதான் அவர் ஓர் அரசியல்வாதி. என்எல்சி அணு உலை குறித்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்கு திமுக நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE