சமூக வலைதளங்களில் மீண்டும் பரவும் வதந்தியால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கம் @ கோவை

By இல.ராஜகோபால்

கோவை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பரப்பப்படும் வதந்திகளால் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் கலக்க மடைந்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொழில் நகரான கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கட்டுமானம், ஓட்டல், மருத்துவமனை உள்ளிட்ட பெரும்பாலான சேவைத் துறைகள் மற்றும் ஜவுளி, வார்ப்படம், பம்ப்செட் உள்ளிட்ட உற்பத்திப் பிரிவின் கீழ் உள்ள பல தொழில் நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக முன்பு பரவிய வதந்தி காரணமாக தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். காவல் துறை, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தற்போது மீண்டும் குழந்தை கடத்தல் உள்ளிட்ட சம்பவங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாக கூறி நம்பகத் தன்மை இல்லாத வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பரப்பி வருகின்றனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறு சுழற்சி ஜவுளித் தொழில் கூட்டமைப்பின் ( ஆர்டிஎப் ) தலைவர் ஜெயபால் கூறும்போது, “140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு உள்ளதுறைகளை தேடி வருகின்றனர். இத்தகைய நபர்கள் மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு செய்திகளை பரப்புவது கண்டிக்கத்தக்கது. புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் காப்பதில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வதந்தி பரப்புவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் ( ஓஸ்மா ) தலைவர் அருள் மொழி கூறும்போது, “பெரும்பாலும் ஒழுங்கு படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் அதிகம் வருவதில்லை. எந்த தகவலையும் உறுதிப் படுத்தாமல் வதந்தி பரப்புவது குற்றம். தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வட மாநில தொழிலாளர்களின் விவரங்களையும் பெற காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் கேட்டபோது, “கோவை மாவட்டத்தில் சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகின்றன. காவல் துறையுடன் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

வெளியே சென்றால் ‘ஐடி’ கார்டு கட்டாயம்: ஜவுளித் தொழில் துறையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழி முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப் பட்டுள்ளது. வெளியே செல்லும் போது ‘ஐடி’ கார்டு அவசியம்.

தனி நபராக செல்வதை தவிர்த்தல், தமிழ் புலமை கொண்ட தொழிலாளர்களை உதவிக்கு அழைத்தல், அறிமுகம் இல்லாத பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக தொழில் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொள்ள வேண்டும் என, காவல் துறை சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE