மிகப்பெரிய கட்டுமானங்களின் அருகில் உள்ள இடங்களுக்கும் சாலை வசதியை உறுதி செய்ய வேண்டும்: சிஎம்டிஏ, டிடிசிபி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மிகப்பெரிய கட்டுமானங்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கான அனுமதி அளிக்கும்போது, அந்த நிலங்களுக்கு அருகில் உள்ள இடங்களுக்கும் உரிய சாலை வசதி இருப்பதை உறுதி செய்யும்படி சிஎம்டிஏ, டிடிசிபி அதிகாரிகளுக்கு வீட்டுவசதித் துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வீட்டுவசதி, அலுவலக இடத் தேவைகளை கருத்தில்கொண்டு பல்வேறு நிறுவனங்கள் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள், அலுவலக வளாகங்களை நிர்மாணிக்கின்றன.

இதற்கான அனுமதிக்காக விண்ணப்பிக்கும்போது, இடத்தை பொறுத்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அல்லது தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி) ஆகியவை அனுமதி அளிக்கின்றன. அவ்வாறு அனுமதி அளிக்கும்போது, இந்த இடங்களுக்கு அருகில் உள்ள இதர நிலங்களுக்கான சரியான இணைப்புச் சாலை இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. இப்பிரச்சினையை தவிர்க்கும் வகையில், சிஎம்டிஏ மற்றும் டிடிசிபிக்கு சில அறிவுறுத்தல்களை வீட்டுவசதித் துறை செயலர் வழங்கியுள்ளார்.

அதில், மிகப்பெரிய குடியிருப்பு வளாகங்கள் கட்டப்படும் நிலையில், அருகில் உள்ள நிலங்களுக்கான இணைப்புச் சாலைகள் தடைபடுவதாக அரசின் கவனத்துக்கு வந்தது. ஒருங்கிணைந்த கட்டிட மேம்பாட்டு விதிகளின்படி, மிகப்பெரிய குடியிருப்பு கட்டுமானங்கள் அமையும்போது, அருகில் உள்ள நிலங்களுக்கான உரிய இணைப்புச் சாலைகள் தடைபட்டு விடக்கூடாது.

எனவே, நில மேம்பாட்டு நிறுவனத்தினர் அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது, இணைப்புச் சாலை போன்றவற்றுக்காக தேவைப்படும் நிலத்தை இலவசமாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு எழுதித் தரவேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றியே அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE