மதுரை பஸ்நிலையத்தில் உதிர்ந்து விழுந்த மேற்கூரை கான்கிரிட் - அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணிள் நடந்து வரும்நிலையில் இன்று கான்கிரிட் மேற்கூரை சிமெண்ட் பூச்சி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணிகள் இல்லாததால் விபரீத சம்பவம் எதுவும் ஏற்படவில்லை.

மறைந்த முதல்வர் கருணாநிதி கட்டி திறந்து வைத்த மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்பட்டது. பஸ்நிலையம் கான்கிரீட் பூச்சிகள் அவ்வப்போது உடைந்து கீழே விழுந்து வந்தது. ஆங்காங்கே சுவர்கள் விரிசல் விட்டு கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரிந்தது. பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான கழிப்பிட வசதிகளும் இல்லை. ஐஎஸ்ஒ தரச்சான்று பெற்ற பஸ்நிலையம், தற்போது பயணிகள் முகம் சுளிக்கக்கூடிய வகையில் காணப்படுகிறது. ஆபத்தான நிலையில் காணப்பட்ட பஸ்நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.

அதனால், பஸ்நிலையத்தை சீரமைக்க மேயர் இந்திராணி நடவடிக்கை எடுத்தார். அதன் அடிப்படையில் ரூ.12 கோடி நிதிஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் ஒரு புறம் நடந்துவரும் நிலையில் மற்றொரு புறம் ஏற்கெனவே மேற்கூரை கான்கிரிட் சிமெண்ட் பூச்சி உதிர்ந்து விழுந்த இடத்தில் மீண்டும் தற்போது காங்கிரிட் பூச்சிகள், உதிர்ந்து விழ ஆரம்பித்துள்ளன.

பரபரப்பான இந்த பஸ்நிலையத்தின் ஒரு பகுதியில் இன்று மேற்கூரை கான்கிரிட் திடீரென்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் விபரீத சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், மேற்கூரை இடிந்து விழக்கூடிய அபாயமாக உள்ள இடங்களில் முன்னுரிமை கொடுத்து இப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கு மண்டலத்தலைவர் சரவணபுவனேஷ்வரி கூறுகையில், ‘‘பணிகளை தேர்தலுக்கு முன் முடிக்க திட்டமிட்டு வேகமாக நடக்கிறது. நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் பணிகளில் தொய்வு இருக்காது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE