யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? - கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் பாஜக

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம், என நிர்வாகிகளிடம் கட்சி சார்பில் கருத்து கேட்கப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்து, பாஜகவின் 7 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

இதில் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, ராமநாதபுரம், மத்திய சென்னை, திருச்சி, தஞ்சாவூர், சேலம், சிவகங்கை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல், பாஜகவே போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக, முக்கிய தொகுதிகளில் பாஜகவில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம், என கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.

பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து பாஜக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, உங்கள் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் யாரை வேட்பாளராக நிறுத்தலாம், ஏன் அவரை வேட்பாளராக்க வேண்டும், அவருக்கும் கட்சிக்குமான தொடர்பு, மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள செல்வாக்கு என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கும் விவரங்களின் அடிப்படையில், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மதுரை மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளது. பாஜகவில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத் தலைவராக இருந்த ரவிபாலா, பாஜக மாநில துணைத் தலைவர் மகாலெட்சுமி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர். இவர்களில் ரவிபாலா, 1996 முதல் பாஜகவில் உள்ளார். தற்போது, திண்டுக்கல் மாவட்ட பார்வையாளராகவும், தேனி எம்.பி. தொகுதி பொறுப்பாளராகவும் உள்ளார். முக்குலத்தோர் சமுதாயத்தில் அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர்.

மாநில துணைத் தலைவரான மகா லெட்சுமி, சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர். மதுரை கிழக்கு மாவட்ட பாஜக பார்வையாளராகவும், மத்திய மின் தொகுப்பு கழக தனி இயக்குநராகவும் உள்ளார். தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள இவர், ‘மக்களுடன் மகாலெட்சுமி’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ரவிபாலா, மகாலெட்சுமி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மதுரை மக்களவைத் தொகுதியை பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணியும் கேட்டு வருகிறது. ஓபிஎஸ் அணிக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்படும் நிலையில், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகி ருஷ்ணன் ஓபிஎஸ் அணி வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE