“ஓட்டுக்களைப் பெறவே மோடி தமிழில் பேசி நடிக்கிறார்” - தயாநிதி மாறன் எம்.பி

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: “தமிழைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை தமிழ் மீதும், திருக்குறள் மீதும் பெரும் காதல் இருப்பதுபோல் பிரதமர் மோடி நடிக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் இப்போது வருவது ஓட்டுக்களை பெறவே வருகிறார். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

மதுரை ஆரப்பாளையத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. பகுதிச் செயலாளர் மாறன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் மா.ஒச்சுபாலு வரவேற்றார். கோ.தளபதி எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.இதில், மதுரை மேயர் இந்திராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மா.ஜெயராமன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி பேசியதாவது: “பின்தங்கியிருந்த தமிழகம், முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதற்குப் பின் முன்னேறியது. மதுரை மாவட்டத்துக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம், கீழடி அருங்காட்சியகம் உள்பட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது. சென்னையைப்போல் மதுரைக்கும் மெட்ரோ ரயில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் பெண்களுக்காக ‘தோழி’ விடுதி அமைக்கப்படவுள்ளது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இந்த அடிமைகள் நம்மை விற்றுவிட்டு சென்றனர். பாஜகவினர் பொய்ப் பிரச்சாரம் செய்துவருகின்றனர். பாஜக இந்திய அரசின் சார்பில் ‘மோடியின் உத்தரவாதம்’ என ஒரு விளம்பரம் தொலைக்காட்சிகளில் வருகிறது. ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு விளம்பரம் வந்துள்ளது. அது இந்தி பேசும் மக்களுக்கான விளம்பரம்.

தமிழைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை தமிழ் மீதும், திருக்குறள் மீதும் பெரும் காதல் இருப்பதுபோல் பிரதமர் மோடி நடிக்கிறார். கேரளாவுக்கு போனால் மலையாளம் பிடித்த மொழி எனவும், என கர்நாடகா சென்றால் கன்னட மொழியிலும், ஆந்திரா சென்றால் தெலுங்கு மொழியிலும் பேசுவார். இப்படி மாநிலத்திற்கு மாநிலம் சென்று அந்தந்த மொழிகளைப்பிடிக்கும் என பொய்ப்பேசி மக்களை கவர்கிறார்.

மோடி ஊருக்கு ஊர் சென்று அவர்களது மொழியில் பேசுவது ஓட்டை களவாடத்தான். யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு ரூ.1500 கோடியும், பல கோடி மக்கள் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.28 கோடியும் செலவழிக்கின்றனர். தமிழக மக்களை மோடிக்குப் பிடிக்காது. வெறுப்பு அரசியலை வளர்க்கிறார்கள்.

தமிழகம் அனைத்து மதத்தையும் மதிக்கும் மாநிலம். எம்மதம் சம்மதம் என வாழும் மக்கள் வாழ்கின்றனர். இங்கு பிரிவினை செய்ய முடியாது. உங்களது பிரித்தாளும் சூழ்ச்சி இங்கு நிறைவேறாது. தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு அக்கறை கிடையாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் இப்போது வருவது ஓட்டுக்களை பெறவே வருகிறார். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE