கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவரது தந்தை, சகோதரி வீடுகள் உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபுவின் தந்தை ஐயப்பா, 2001-2006-ல் தியாகதுருகம் ஒன்றியக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 2006 -2011 மற்றும் 2011-2016-ம்ஆண்டுகளில் ஐயப்பாவின் மனைவி தைலாம்மாள் ஒன்றியக் குழு துணைத் தலைவராகப் பதவி வகித்தார்.

இந்த காலகட்டங்களில் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ‘10 ரூபாய் இயக்கம்’ என்ற அமைப்பு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

2016-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு, கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக ஐயப்பாவின் மகன் பிரபு தேர்வானார். ஒருகட்டத்தில், அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த பிரபு, மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார்.

இந்நிலையில், ஐயப்பா, அவரதுமனைவி தைலம்மாள் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று காலை டிஎஸ்பி சத்தியராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் ஐயப்பாவின் வீடு, அவரது மகனான முன்னாள் எம்எல்ஏ பிரபுவின் வீடு, அவரது பால் பண்ணை, விழுப்புரத்தில் உள்ள ஐயப்பாவின் மகள் சுகந்தியின் வீடு, தியாகதுருகம் அருகே விருகாவூரில் உள்ள ஐயப்பாவின் நண்பர் ஜான்பாஷா வீடு, தியாகதுருகம், அண்ணாநகரில் உள்ள கரின்ஷா தக்கா பகுதியில் உள்ள நண்பர் லியாத் வீடு மற்றும் அங்குள்ள ஐயப்பாவின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

பெங்களூரு சென்ற ஐயப்பா: சோதனையின்போது முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவரது மனைவி கௌசல்யா, தாயார் தைலம்மாள் மற்றும் குழந்தைகள் ஒரு வீட்டிலும், ஐயப்பாவின் வீட்டில் அவரது மற்றொரு மகனான பிரதீப்பும் இருந்துள்ளனர். ஐயப்பா மருத்துவ சிகிச்சைக்காக பெங்களூரு சென்றிருந்தார். சோதனை குறித்து தகவல் அறிந்தவுடன், அவர் உடனடியாக பெங்களூருவில் இருந்து திரும்பினார்.

அதிமுகவினர் திரண்டனர்: இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புசோதனை குறித்த தகவலறிந்த, சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சர் மோகன், அதிமுககள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுரு, முன்னாள் எம்எல்ஏ அழகுவேல் பாபு மற்றும் அதிமுகவினர் உள்ளிட்டோர் முன்னாள் எம்எல்ஏ பிரபுவின் வீட்டின் முன் திரண்டனர்.

அவர்களை பிரபுவின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனுமதிக்கவில்லை. வீட்டுக்குள் இருந்த வெளியே வந்த பிரபு, கட்சியினரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, உள்ளே சென்றார். வீட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்: சோதனை நடந்த 9 இடங்களில் பிரபு வீடு நீங்கலாக, மற்ற8 இடங்களில் நேற்று இரவு 8 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் இரவு 8 மணியைத் தாண்டியும் சோதனை தொடர்ந்தது.

கடந்த புதன்கிழமை பண்ருட்டியில் முன்னாள் அதிமுக எம்எல்ஏசத்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் இதேபோல சோதனைமேற்கொண்டனர். சத்யாவின் கணவரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனையில் ரூ.15 கோடிமதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE