தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, முதுகுளத்தூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட முருகன் என்பவரை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, 10 கார்கள் மற்றும் 40 இரு சக்கர வாகனங்களுடன் சென்றதுடன், ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி, பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, தேர்தல் விதிகளை மீறியதாக, கமுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், இந்த குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வுக்கு 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, டிடிவி.தினகரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE