சென்னை | தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்குப் பின் புரளி என உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று சோதனைக்கு பின்பு தெரியவந்துள்ளது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செய்திச் சேனலை தொடர்பு கொண்ட நபர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தொலைக்காட்சி தரப்பில் இருந்து காவல் துறை கட்டுப்பட்டு அறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை சார்பில் வெடிகுண்டு நிபுணர்கள் தலைமைச் செயலகம் முழுவதும் சோதனை செய்தனர். மோப்ப நாய் உதவியுடன் தலைமைச் செயலகத்தின் நுழைவு முதல், முக்கிய அறைகள், சட்டப்பேரவை அறைகள் என அனைத்திலும் சோதனை செய்யப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையின் முடிவில் அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து வேறு ஏதேனும் காரணங்களுக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக என்பதை சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். தனியார் தொலைக்காட்சிக்கு வந்த மொபைல் போன் நம்பர் விவரங்களை வைத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். அதன்படி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடலூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE