சென்னை: அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் நீதித்துறைக்கு 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் இடஒதுக்கீட்டு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தயாரித்த தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிபதிகள் என அனைத்து நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து சிதைக்கப்படுவதும் அதை ஆளும் அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் கவலையளிக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 245 சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டு, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் கடந்த 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. சிவில் நீதிபதிகள் பணிக்கு 92 பின்னடைவுப் பணியிடங்கள், 153 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 245 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுப் பட்டியலைத் தயாரித்த ஆணையம், அதிக மதிப்பெண்கள் எடுத்த தேர்வர்களை பின்னடைவுப் பணியிடங்களிலும், அவர்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்த தேர்வர்களை பொதுப் போட்டிப் பிரிவிலும், அடுத்து வந்தவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் நிரப்பியது. இது இடஒதுக்கீட்டு விதிகளுக்கு எதிரானது என்று கூறி சில தேர்வர்கள் தொடர்ந்த வழக்கில் தான், சிவில் நீதிபதிகள் பணிகளுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
» பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
» பொருளியல், புள்ளியியல் துறை பணியாளர்கள் பதவி உயர்வில் இறையன்பு பரிந்துரையை ஏற்கவும்: ராமதாஸ்
2016 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 27 ஆம் விதிப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் போது, அதிக மதிப்பெண் எடுத்தவர்களைக் கொண்டு முதலில் பொதுப்போட்டிப் பிரிவு நிரப்பப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து பின்னடைவுப் பணி இடங்களும், மூன்றாவதாக நடப்புப் பணியிடங்களும் இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து நிரப்பப் பட வேண்டும்.
இதை முழுமையாக ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், 27 ஆம் விதியை முழுமையாக புரிந்து கொண்டு அதனடிப்படையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.
இத்தகைய சமூகநீதி சிதைப்பு என்பது தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறவில்லை. இதற்கு முன் 2019 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போதும் இதே குளறுபடிகள் நிகழ்ந்தன. அப்போது இட ஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அறிக்கைகள் மூலம் பாடம் எடுத்தேன். சமூகநீதி சிதைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடித்த அளவுகோல் தவறு என்று தீர்ப்பளித்தன.
ஆனாலும், அதை ஏற்காத ஆசிரியர் தேர்வு வாரியம் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், 27 ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது. தமிழ்நாடு அரசு (எதிர்) சோபனா வழக்கு என்றழைக்கப்படும் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இட ஒதுக்கீட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கும் போது அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும், நடைமுறைப் படுத்த முடியாமலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் செயல்படுகின்றன என்றால், சமூகநீதிக்கு அதை விட மோசமான ஆபத்து இருக்க முடியாது.
ஆசிரியர்கள் நியமனத்திலும், நீதிபதிகள் நியமனத்திலும் நிகழ்ந்த இந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள், பட்டியலினம், பழங்குடியினர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தான். சிவில் நீதிபதிகள் நியமனத்தில் இப்பிரிவுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் தலையிட்டதால் தான் அவர்களுக்கு புதிய பட்டியலில் வேலை கிடைக்கப் போகிறது. அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
சமூகநீதியின் தொட்டில் என்று தமிழ்நாடு போற்றப்படுகிறது. அத்தகைய பெருமை கொண்ட தமிழ்நாட்டில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என ஒவ்வொரு அமைப்பாலும் அடுத்தடுத்து சமூக நீதி சிதைக்கப்படுவது தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இதே நிலை தொடர்ந்தால், ஒவ்வொரு தேர்விலும் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் தேடிச் சென்று தீர்வு பெறுவது சாத்தியமற்றது.
இத்தகைய அவலநிலை ஏற்பட்டதற்கு காரணம் சமூகநீதியில் அரசுக்கு அக்கறை இல்லாதது தான். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதியை சிதைத்ததுடன், உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து கொட்டு வாங்கிய அதிகாரி மீது அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், மற்ற அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்; இத்தகைய தவறுகள் நடக்காமல் இருந்திருக்கும்.
இனிவரும் காலங்களிலாவது இத்தகைய தவறுகள் நடக்காமல் தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்காக, சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் சமூகநீதி சிதைக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரி யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 27 ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அனைத்து தேர்வாணையங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும்.
அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களிலும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago