கேட்பது 2... கிடைப்பது 1... இழுபறியில் திமுக - மதிமுக தொகுதி உடன்பாடு

By செய்திப்பிரிவு

திமுக கூட்டணியில் மதிமுக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இறுதியாக கேட்ட நிலையில் திமுக ஒரு மக்களவை தொகுதி மட்டுமே தற்போது தருவோம் என பிடிவாதமாக இருப்பதால், மதிமுகவுடனான தொகுதி உடன்பாடு இழுபறியில் உள்ளது. மக்களவைத் தேர்தலில் 24 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும், 3 தொகுதிகளில் தங்கள் சின்னத்தில் மற்றவர்கள் போட்டியிடும் வகையில் கூட்டணி பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில்,பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். முதல் இரண்டு முறையும் 3 தொகுதிகள் மற்றும் தங்களின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பேசினர். ஆனால், உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்நிலையில், நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இறுதியாக கடந்த தேர்தலின்போது முடிவான ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இந்த முறையும் தரும்படியும், பம்பரம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திமுக சார்பில் மக்களவை தொகுதி மட்டுமே தருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப்பின் அர்ஜூனராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘நாங்கள் ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை கேட்டோம். தலைமையிடம் பேசி முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அடுத்த கட்டமாக பேச உள்ளோம்.

பம்பரத்தில்தான் போட்டி: நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். எங்கள் சின்னத்தில்தான் போட்டியிடுவோம். திமுக நிர்பந்தித்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டோம்’’ என்றார். இந்நிலையில், திமுக சார்பில் கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதியை, இம்முறை மதிமுகவுக்கு ஒதுக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE