சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதன் அலட்சியத்தைக் கைவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (மார்ச் 1) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பியிருந்த மனைவியும், 5 வயது குழந்தையும் ஆதரவற்றவர்களாகி நிற்கின்றனர். கண்ணனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தத் தடையும் இல்லாமல் தொடருகின்றன. இடையில் சில காலம் ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடமிருந்து தப்பியிருந்த இளைஞர்கள் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி முதலில் பணத்தையும், பின்னர் விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து வருகின்றனர்.
மாம்பட்டி கண்ணனின் தற்கொலை கடந்த இரு மாதங்களில் நிகழ்ந்த மூன்றாவது தற்கொலை ஆகும். கடந்த ஜனவரி 4-ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜனவரி 7-ஆம் நாள் சென்னை மாடம்பாக்கத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் சைதன்யா என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால், தமது 8 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாமும் தற்கொலை செய்து கொள்ள முயன்றிருக்கிறார். அவர் காப்பாற்றப்பட்ட நிலையில் குழந்தை இறந்து விட்டது. இப்போது மூன்றாவதாக மாம்பட்டி கண்ணன் உயிரிழந்திருக்கிறார்.
» “இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” - ஓபிஎஸ் திட்டவட்டம்
» முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
ஐரோப்பிய நாடுகளில் இருந்து 2014-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வந்த ஆன்லைன் சூதாட்டம் 2016-ஆம் ஆண்டு முதல் இளைஞர்களின் உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்தது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து சுமார் 60 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வலியுறுத்தலால் 2020-ஆம் ஆண்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் மீண்டும் தலைதூக்கிய ஆன்லைன் சூதாட்டத்திற்கு 49 பேர் பலியானார்கள்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் நோக்குடன் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. அதன் பயனாக தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் 2022&இல் மீண்டும் நிறைவேற்றப்பட்டும் கூட, திறமை சார்ந்த விளையாட்டுகளான ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்றவற்றை அந்த சட்டங்களின் மூலம் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தன் காரணமாக ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் தழைத்து தமிழ்நாடு முழுவதும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கத் தொடங்கியுள்ளன.
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை பெறுவது தான் இப்போதுள்ள ஒரே தீர்வு ஆகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் இன்னும் ஆன்லைன் ரம்மிக்கு அரசால் தடை பெற முடியவில்லை.
அதனால் தமிழ்நாடு மீண்டும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி விட்டது. தொடக்கத்தில் குறைந்த அளவு பரிசுத் தொகை வழங்கி வந்த ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் இப்போது ஒருவருக்கான அதிகபட்ச பரிசாக மட்டும் ரூ.6 கோடி வரை வழங்குகின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் ஆன்லைன் ரம்மி போட்டித் தொடர்களை அறிவித்துள்ள ஒரு நிறுவனம் ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இவ்வாறு ஆசை காட்டும் நிறுவனங்களின் வலைகளில் இளைஞர்கள் விழுவதை தடுக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டங்களில் இருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமானால் உச்ச நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 10-ஆம் நாள் நீக்கிய நிலையில், அதன் பின் 88 நாட்கள் கழித்த் தான் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என்பதை உச்ச நீதிமன்றம் அறிவிக்கவில்லை. மேல்முறையீட்டின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கை அனுப்பவும் நீதிபதிகள் முன்வரவில்லை. அதன்பின் 25 நாட்களாகி விட்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான வழக்கின் விசாரணையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு அதன் அலட்சியத்தைக் கைவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை விரைவுபடுத்தவும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மாம்பட்டி கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago