தஞ்சை, திருப்பூர், காஞ்சியை சேர்ந்த 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

By செய்திப்பிரிவு

சென்னை: இயற்கை விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்ட தஞ்சாவூர், திருப்பூர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 விவசாயிகளுக்கு ‘நம்மாழ்வார்’ விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயிர்ம வேளாண்மையில் (ஆர்கானிக்/ இயற்கை விவசாயம்) நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடுவதோடு, அதை ஊக்குவித்து பிற உயிர்ம விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் ‘நம்மாழ்வார்’ பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக வேளாண் துறையின் 2023-24 ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த கோ.சித்தருக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் பரிசு தொகை, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கே.வி.பழனிச்சாமிக்கு 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம் பரிசு தொகை, ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம், காஞ்சிபுரத்தை சேர்ந்த கு.எழிலனுக்கு 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் பரிசு தொகை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 27-ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, ஆர்.காந்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலர் அபூர்வா, வேளாண் வணிக ஆணையர் கோ.பிரகாஷ், தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமாரவேல்பாண்டியன்,வேளாண்மை துறை இயக்குநர் பி.முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE