ஈரோடு - ஜோலார்பேட்டை ரயில் நேரம் மாற்றியதால் பயணிகள் அவதி

By செய்திப்பிரிவு

அரூர்: ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு செல்லும் ரயில் சேலத்துக்கு வரும் நேரம் மாற்றி அமைக்கப் பட்டுள்ளதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் பழைய நேரத்தில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு - ஜோலார்பேட்டை விரைவு பயணிகள் ரயில் ( ரயில் எண் 06846 ) தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ரயில் நிறுத்தங்களான சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூர், தொங்கனூர், புட்டிரெட்டிப் பட்டி, பொம்மிடி, லோக்கூர் ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசுப் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினர் சேலம், ஈரோடு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

வழக்கமாக ஈரோட்டில் 4.40 மணிக்கு புறப்பட்டு சேலத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து ஜோலார்பேட்டைக்கு சென்று வந்தது. கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் மாலை 5.40 மணிக்கு ரயில் புறப்பட்டு சேலத்துக்கு மாலை 6.52 மணிக்கு வரும் வகையில் நேரம் மாற்றி அமைக்கப் பட்டது. மாற்றி அமைக்கப்பட்ட நாளிலிருந்து, தொடர்ந்து பல நாட்களாக சுமார் இரண்டு மணி நேரம் காலதாமதமாக ரயில் வந்து கொண்டு இருப்பதாக பொம்மிடி மற்றும் சுற்றுப் பகுதி ரயில் பயணிகள் கூறுகின்றனர்.

சேலத்தை கடந்து வரும் போது மற்ற ரயில்கள் செல்வதற்காக இந்த ரயில் நிறுத்தி வைத்து இயக்கப்படுவதாகவும், இதனால் காலதாமதம் ஏற்படுவதாக ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் சேலத்தில் இருந்து திரும்பும் பயணிகள் சாமல்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட தங்களது சொந்த ஊர் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு நேரத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க பயணிகளின் வசதிக்காக மீண்டும் , ஈரோடு - ஜோலார்பேட்டை ரயிலை மீண்டும் மாலை 4.40 மணிக்கு ஈரோட்டில் புறப்பட்டு சேலத்துக்கு 6 மணிக்கு வந்து செல்லும் வகையில் இயக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE