மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் அரசு நிவாரணத் தொகை ரூ.37.53 கோடி வரவு: திருவள்ளூர் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.37,52,64, 93 7 அரசு நிவாரணத் தொகையாக, 33,412 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சண்முகவல்லி, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மலர்விழி, வேளாண்மை இணை இயக்குநர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)(பொறுப்பு) வேதவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், திரூர் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், பயிர் பூஸ்டர்கள் குறித்து காணொலி மூலம் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். அதே போல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் தோட்டக்கலை பயிர்களுக்கு கடன் வழங்கப்படுவது குறித்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில், 13 பயனாளிகளுக்கு ரூ.43.33 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 172 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அம்மனுக்கள் மீது துரிதமாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த விவசாயிகள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 20,843.98 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் மற்றும் 1,102.74 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.37,52,64, 937 அரசு நிவாரணத் தொகை, 33,412 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 555.25 ஹெக்டேர் பரப்பிலான நவரை நெற்பயிர், ராபி பருவ நிலக்கடலை, எள் மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயிர்களுக்கு 401 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு அரவைப் பருவத்தில், கடந்த பிப்.15-ம் தேதி வரை 1,19,473 மெட்ரிக் டன் கரும்புகளை சப்ளை செய்த 711 கரும்பு விவசாயிகளுக்கு முதல் தவணையாக டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.23.89 கோடி கரும்பு கிரயத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE