மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் ஓய்வூதியர்களை நிறுத்த முடிவு

By செய்திப்பிரிவு

சிவகங்கை: மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக்குமார் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பின்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மு.செல்வக் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 6.28 லட்சம் அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். திமுக தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு, 3 ஆண்டுகளாகியும் ரத்து செய்யவில்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதி தராத பல மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் 2 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து 30,600 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். பணியின் போது 5,864 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ரூ.1 கூட ஓய்வூதியமாக அவர்களோ, அவர்களது குடும்பமோ பெறவில்லை. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உள்ளது. ஆனால் 60 வயது வரை கடுமையாக உழைக்கும் எங்களுக்கு ஓய்வூதியம் இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலில் ஓய்வு பெற்றவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டது. சிவகங்கையில் வாசுகி என்பவரை நிறுத்துகிறோம். தேர்தலில் போட்டியிடும் நடைமுறை, அடுத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும். திமுக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 47 தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது.

ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 10,000 பேர் உள்ளனர். இந்த தேர்தலில் எங்களது பலத்தை காட்டுவதற்காக வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE