‘உங்கள் குரல்’ சேவையில் வாசகர் தகவல்.. உடனடியாக களத்தில் இறங்கியது ‘தி இந்து’: 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம் - திருத்தணி அருகே வறுமையின் கொடுமையால் எடுத்த முடிவு; உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி கூறிய உருக்கம்

By ஆர்.நாகராஜன், ப.முரளிதரன்

‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ சேவை மூலம் வாசகர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், இன்று நடக்கவிருந்த சிறுமியின் திருமணம் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் உடனடியாக களமிறங்கிய ‘தி இந்து’ இதை உடனடியாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று, திருமணத்தை நிறுத்தியது. வறுமையின் கொடுமையால், சிறுமியை வயதான ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்க அவர்கள் ஏற் பாடு செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்று, அந்தக் குறைகள், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ‘உங்கள் குரல்’ சேவையை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வழங்கி வருகிறது. தினமும் ஏராளமான வாசகர்கள், பொதுமக்கள் இந்த சேவையை தொடர்பு கொண்டு, பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி ‘உங்கள் குரல்’ சேவை மூலம் ‘தி இந்து’வை ஒரு வாசகர் தொடர்பு கொண்டார். ‘திருத்தணி பக்கத்துல உள்ள ஜனகராஜ்குப்பத்துல 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி நடக்குது. வயசான ஒருவரை கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க. எப்படியாவது தடுங்க, ப்ளீஸ்’ என்றார்.

இதையடுத்து, உடனடியாக களத்தில் இறங்கியது ‘தி இந்து’. சம்பந்தப்பட்ட பகுதியை நோக்கி விரையத் தொடங்கியது நமது டீம். அதுதொடர்பான தகவல்களை சேகரித்து, உறுதிசெய்யும் பணியும் தீவிரமாக நடந்தது. திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஜனகராஜ்குப்பம் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அந்த சிறுமியை திருமணம் செய்துகொள்ள இருப்பவருக்கு 43 வயதாகிறது. அந்த சிறுமிக்கு தந்தை இல்லை. தாய் மட்டுமே இருக்கிறார். மிகவும் ஏழ்மை நிலை யில் உள்ள குடும்பம். வறுமை நிலையின் காரணமாகவே, சிறுமி என்றும் பாராமல் வயதான ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர் என்பது விசாரித்ததில் தெரியவந்தது.

இத்தகவல்கள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்டோருக்கு ‘தி இந்து’ நாளிதழ் மூலம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர் பாக உடனே விசாரணை நடத்துமாறும், சிறுமிக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவது உண்மையெனில், உடனடியாக அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமி படிப்பை தொடர்வதற்கு உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திருவள் ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிப்பட்டு வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, ஜனகராஜ்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) தமிழ்வாணனை உடனே தொடர்பு கொண்டு, கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார். உடனடியாக அங்கு சென்ற விஏஓ தமிழ்வாணன், சம்பந்தப்பட்ட சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்மைதான் என்பதை உறுதி செய்து, அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார்.

இதையடுத்து, இரவு 9.30 மணி அளவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, காவல் துறையினருடன் ஜனகராஜ்குப்பத்துக்கு சென்றார். சிறுமி வீட்டு வாசலில் பந்தல் அமைத்து திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. உறவினர்கள் கூடியிருந்தனர். அங்கு சென்ற வட்டாட்சியர் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். இதுபற்றி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி கூறியதாவது:

சிறுமிக்கு 15 வயது மட்டுமே நிரம்பியுள்ளது. அவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை 9 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். விவசாயக் கூலித் தொழிலாளியான தாய்தான் சிறுமியை வளர்த்து வருகிறார். சிறுமியின் அண்ணன் தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்கிறார்.

இந்த சூழலில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள 43 வயதாகும் ஒருவருக்கு சிறுமியை திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்துள்ளனர். 25-ம் தேதி (இன்று) திருப்பதி யில் திருமணத்தை நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். உடனடி நடவடிக்கையின் காரணமாக, தக்க சமயத்தில் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிறுமியை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைத்தோம் என்றார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலகத்துக்கு சிறுமியும், அவரது தாயும் நேற்று அழைத்து வரப்பட்டனர். அங்கு குழு தலைவர் எலிஸ் பானு, உறுப்பினர் தசரதன் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

தற்போது நிச்சயதார்த்தம் மட்டுமே நடத்த ஏற்பாடுகள் செய்ததாக சிறுமியின் தாயார் கூறுகிறார். தனக்கு திருமணம் நடக்க இருந்தது பற்றியோ, அதனால் படிப்பு பாதிக்கப்படும் என்பது பற்றியோ அந்த சிறுமியிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று அதிகாரிகள் கூறினர். தற்போது குழந்தைகள் நல அலுவலர்கள் பாதுகாப்பில் அந்த சிறுமி தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

இதுபற்றி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் கூறியபோது, ‘‘25-ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுவதால், அதை தடுக்கும் வகையில் சிறுமியை எங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறோம். தாயிடமும், சிறுமியிடமும் 26-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும். சிறு பருவத்தில், படிக்கும் வயதில் திருமணம் செய்யக்கூடாது என்று அவர்களுக்கு உரிய ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். சிறுமியின் படிப்பு தொடர வேண்டும் என்பதில் முழு அக்கறை கொண்டிருக்கிறோம். சிறுமியை தாயுடன் அனுப்புவதா, அரசு காப்பகத்தில் தங்கவைத்து படிக்க வைப்பதா என்பது அந்த சிறுமியின் விருப்பத்துக்கேற்ப முடிவு செய்யப்படும்’’ என்றார்.

வறுமையின் கொடுமை

கணவனை இழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தாய் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்து வருகிறார். வாட்டும் வறுமையை எதிர்கொள்ள வழி தெரியாமல்தான், வயதான ஒருவருக்கு தன் 15 வயது மகளை திருமணம் செய்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் கூறினர்.

இந்த சூழலில்தான், ‘தி இந்து’ தெரிவித்த தகவலின் அடிப்படையில், சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

‘‘குடும்பக் கஷ்டத்தால இப்படி செஞ்சிட்டாங்க. சின்ன வயசுலயே குழந்தைகளை கல்யாணம் செய்து கொடுத்தா, அந்த குழந்தை யோட கல்வி மட்டுமில்லாமல், எதிர்காலமே பாதிக்கப்படும் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியல. அப்படி தெரிஞ்சிருந்தா, நாங்களே வேண்டாம்னு சொல்லியிருப்போம். அந்த குழந்தை மீது அக்கறை காட்டி, உடனடியா திருமணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்த ‘தி இந்து’ நாளிதழ், மாவட்ட அதிகாரிங்க, முகம்தெரியாத ‘தி இந்து’ வாசகர் உட்பட எல்லோருக்கும் மனசார நன்றி தெரிவிச்சுக்கறோம்..’’ என்று அந்த சிறுமியின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்