தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: பாஜக பிரமுகர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு; 4 பேர் கைது

By வீ.தமிழன்பன்

மயிலாடுதுறை: ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவதாக தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே பழமை வாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதீன மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் இவர் தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி, சிலர் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 25-ம் தேதி புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் சேர்ந்து செல்போன் மூலமும், வாட்ஸப் மூலமும் தொடர்பு கொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தங்களிடம் உள்ளதாகவும், கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், ஆடியோ வீடியோக்களை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக திருவெண்காடு சம்பாக்கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் பேசி மிரட்டுகிறார். பணம் கொடுக்காமல் போலீஸாரிடம் சென்றால், மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளைக் கொண்டு கொலை செய்யக் கூட தயங்கமாட்டோம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டினர். மேலும் நேரிலும் சில முறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்தனர். இதனால் உயிருக்கு பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்.

பின்னர் இது தொடர்பாக செம்பனார்கோயில் தனியார்(கலைமகள்) கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, செய்யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் க.அகோரம், திருக்கடையூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், வினோத், விக்னேஷ் ஆகியோர் தொடர்பு கொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

மடாதிபதியின் நேர்முக உதவியாளராக உள்ள செந்தில் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை செய்யக் கூடியவர்கள். அதனால் கேட்கும் தொகையை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தும் வகையில் பேசினார். இவர்களின் அச்சுறுத்தலால் மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன், பரிதவிப்பில் உள்ளனர். எனவே தொடர்புடையோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து புகாரில் குறிப்பிடப்பட்ட வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் மற்றும் பிரபாகர் ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து செம்பனார்கோயிலைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு(40), நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28), ஆடுதுறை வினோத்(32), திருவெண்காடு சம்பாகட்டளை விக்னேஷ்(33) ஆகிய 4 பேரை நேற்று முன் தினம் இரவு கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE