2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நான்காவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகை புரிந்தார். மற்ற வருகை அரசு விழாக்களாக இருந்த நிலையில், இம்முறை 100 சதவீத பாஜகவின் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தார் பிரதமர் மோடி.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் நடந்தது. பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அது நிறைவேறியதா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
‘கட்சி சேர’ அரசியல்! - குறிப்பாக, இதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சில நுணுக்கங்களைக் கையாள பாஜக நினைத்தது. அதனால், பல மாநிலங்களில் நடப்பது போல் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையப் போவதாகப் பேசியது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் சிலர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியைப் பல்லடத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 26-ம் தேதி நடத்த திட்டமிட்டது பாஜக.
» பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: இமாச்சல் பேரவை பரபரப்பு - நடந்தது என்ன?
» “என் சொந்த இடத்தில் இருப்பது போல உணர்வு” - பாஜக மேடையில் விஜயதரணியின் முதல் பேச்சு
பாஜக இந்நிகழ்வு குறித்து அறிவித்தது முதலே, அதிமுகவில் உள்ள சில முக்கிய தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன. மாஃபா பாண்டியராஜன், தங்கமணி, வேலுமணி, சிங்காநல்லூர் எம்எல்ஏ ஜெயராமன், அம்மன் அர்ஜுணன், கிணத்துக்கடவு தாமோதரன் ஆகியோர் பெயர்கள் சொல்லப்பட்டன.
ஆனால், கட்சியில் இணைய யாரும் வராததால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுணன் , பாஜகவிலிருக்கும் 4 எம்எல்ஏக்களில் 2 பேர் அதிமுகவில் இணையவிருப்பதாக புயலைக் கிளப்பினார்.
பின்னர், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வேலுமணி, “திமுக - அதிமுக இணைய முடியுமா? காங்கிரஸ் - பாஜக இணைய முடியுமா? அந்தச் சூழலில் நான் எப்படி பாஜகவில் இணைவேன்” என இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படியாக, பாஜகவின் ஸ்டண்ட் முழுவதும் தோல்வியைத் தழுவியது.
அண்ணாமலை 'விக்கெட்’ பேச்சு! - கொங்கு பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களைப் பாஜகவில் இணைத்து, இந்தக் கொங்கு மண்ணில் நடக்கும் பொதுக்கூட்டத்தை வெற்றி பெறச் செய்ய பாஜக திட்டமிட்டது. ஆனால், பொதுக்கூட்டத்துக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கோவையில் அதிமுக ’பிக் ஷாட்’ களின் விக்கெட் விழும்” என்றார். அவரின் இந்தப் பேச்சு அவருக்கே எதிரியாக மாறி, யாரும் கட்சியில் இணைய முன்வரவில்லை என விமர்சகர்கள் சிலர் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
இதனால், சுதாரித்துக்கொண்டுப் பொதுக் கூட்டம் தொடங்கும் சில மணி நேரத்துக்கு முன்பு பேசிய அண்ணாமலை, “விக்கெட் எடுப்பதற்கு ஒன்றுமில்லை. விருப்பப்பட்டுத்தான் பாஜகவில் இணைகிறார்கள்” என மாற்றிப் பேசினார். ஆனால், காலம் கடந்த இந்தப் பேச்சு பாஜகவுக்கு எந்தப் பலனையும் தரவில்லை.
பொதுக் கூட்ட அரசியல் பின்னணி? - பிரதமர் மோடி பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் பல்லடத்தில் 1,400 ஏக்கரில் நடத்த திட்டமிடப்பட்டது. 5 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கவும் 10 லட்சம் பேர் நின்று காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 60க்கு 80 அடியில் அமைக்கப்பட்ட மேடைக்கு வர பிரதமர் மோடிக்கு பிரத்யேக வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 13 லட்சம் பேருக்கு உணவுப் பொட்டலங்களும் தயார் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், 1.5 லட்சம் பேர் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்ததாக தகவல் சொல்லப்படுகிறது. அதிலும், பனியன் கம்பெனிகளில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களுக்கு ஒரு நாள் கூலி கொடுத்து அழைத்து வந்ததாகவும் தகவல்கள் சொல்லப்பட்டன.
தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சிகள் தங்கள் பலத்தைக் காட்டுவது வாடிகையாகி வருகிறது. குறிப்பாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிப் பொதுக் கூட்டத்தை நடத்தி தங்கள் பலத்தை நிரூபித்து மக்களவையில் நாமக்கல் சீட் வாங்கியது.
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பொதுக்கூட்டம் நடத்தி தங்கள் பலத்தைக் காட்டியது. அதன் வழியில் பாஜகவும் தமிழகத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்க பொதுக் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், தங்கள் பலம் நிரூபிக்கப்பட்டுள்ளதா என்பது கேள்வியே!
பாஜகவின் வியூகம் என்ன? - கொங்கு பகுதிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த மேடை பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கு முதற்காரணம் பிரதமர் மோடி என்பதால் அவருக்கு மஞ்சளால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், தன் உரையிலேயே கொங்கு பகுதி எனக் குறிப்பிட்டே பேசினார் மோடி.
மேலும், அதிமுகவுடன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் சூழலில், அதிமுகவின் முக்கியமான தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களை நினைவுக்கூர்ந்து பேசியுள்ளார். குறிப்பாக, எம்ஜிஆர் தமிழக மக்களுக்கு நல்லாட்சி தந்ததாகவும், அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா மட்டுமே நல்லாட்சி வழங்கியதாகவும் அதிமுக தலைவர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.
திமுகவை விமர்சிக்காமலும் இல்லை. எம்ஜிஆர் பற்றி பேசுகையில், “குடும்ப அரசியல் காரணமாக அவர் ஆட்சிக்கு வரவில்லை. திறமையின் காரணமாகவே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தார்” என திமுகவை சாடினார். “தமிழக மக்கள் மீது ஜெயலலிதா எந்த அளவுக்கு அன்பு வைத்திருந்தார் என்பது எனக்கு தெரியும்” எனப் பேசினார்.
ஏற்கெனவே, கோவையில் பாஜகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருக்கும் நிலையில், ’கொங்கு பகுதியில் பொதுக் கூட்டத்தில் பேசுவது மகிழ்ச்சி’ எனப் பேசி மோடி ஸ்கோர் செய்திருக்கிறார். தவிர, கொங்கில் மிகவும் பலமாக இருக்கும் அதிமுகவுக்கு ஆட்டம் காட்ட, அவர்கள் மண்ணில் அதிமுக கட்சியின் முக்கியமான தலைவர்கள் பற்றி கூட்டத்தில் பேசியிருப்பதன் வாயிலாக, அதிமுகவின் அதிருப்தி வாக்காளர்களைக் கவருவது பாஜகவின் திட்டமாகவும் இருக்கலாம்.
ஆனால், அதிமுகவில் இணையாமல் இருந்தாலும் பாஜக பலமாகயிருப்பதை வெளிக்காட்ட இந்தக் கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டது. அதற்காகத் தான் அந்த ஸ்டண்டுகள். ஆனால், கூட்டத்தின் நோக்கம் நிறைவேறியதா என்னும் கேள்விக்குப் பாஜகவின் தலைவர்களால் கூட பதில் சொல்ல முடியாது என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago