கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி: சென்னை கொடுங்கையூரில் பரிதாபம்

By செய்திப்பிரிவு

கொடுங்கையூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு தாக்கியதில் 2 தொழிலா ளர்கள் பரிதாபமாக இறந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்ட 2 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொடுங்கையூர் மணலி சேலவாயல் சின்னாண்டி மடம் அருகே சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் மையம் உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டுவருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 50 தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஷிப்ட் முறையில் வேலை பார்க்கின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவுப் பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு கழிவுநீர் தொட்டியில் உள்ள வால்வில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நந்தகுமார் (21), ஜெயக்குமார் (28) என்ற தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதை பார்த்த ராஜி (22), சத்யராஜ் (27) ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற தொட்டிக்குள் இறங்கினர். அவர்களுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தொட்டிக்குள் விஷவாயு பரவியிருப்பதை உணர்ந்துகொண்ட மற்ற தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 4 பேரையும் மீட்டு எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நந்தகுமாரும், ஜெயக்குமாரும் பரிதாபமாக இறந்தனர். ராஜி, சத்யராஜ் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஷவாயு விபத்தில் பலியான நந்தகுமார், வியாசர்பாடி சுப்பிரமணிய நகரை சேர்ந்தவர். ஐ.டி.ஐ படித்தவர். ஜெயக்குமார், கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர். இவருக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். விபத்து தொடர்பாக மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE