குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல்: ரூ.17,373 கோடியில் 36 திட்டங்கள் தொடங்கினார் மோடி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ரூ.17,373 கோடி மதிப்பிலான 36 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் மத்திய அரசு சார்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுதல் மற்றும் நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, ரூ.17,373 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை தொடங்கி வைத்தார். 15 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 3 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

திட்டங்கள் தூத்துக்குடியில் இருந்தாலும், நாட்டின் பல்வேறு இடங்களில் வளர்ச்சிக்கு இவை உறுதுணையாக இருக்கும். இதன்மூலம் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை நம்மால்பெறமுடிகிறது. இதுபோல பல்வேறு துறைமுக திட்டங்களுக்குஅடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நல்ல திட்டங்கள் எல்லாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெறும் கோரிக்கைகளாக, நிறைவேற்றப்படாமலே இருந்தன. உங்கள் பல ஆண்டு கனவுகளை நனவாக்கவே உங்களது பிரதம சேவகனான நான் வந்திருக்கிறேன். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் பயணிகள் படகு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. காசியில் கங்கை ஆற்றின் மீது இந்த படகு வெகு விரைவில் பயணம் தொடங்க உள்ளது. இது ஒருவகையில் எனது தொகுதியான காசி மக்களுக்கு, தமிழக மக்கள் அளிக்கும் நன்கொடை.

மத்திய அரசின் முயற்சியால் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 1,300 கி.மீ. தூரம் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கும் அதிகமாக ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. பல மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. தமிழக சாலை கட்டமைப்பில் மத்திய அரசு சுமார் ரூ.1.50 லட்சம் கோடிக்கு முதலீடுகளை செய்து வருகிறது.

நான் இங்கு பேசுவது ஓர் அரசியல் கட்சியின் சித்தாந்தமோ, எனது தனிப்பட்ட சித்தாந்தமோ கிடையாது. இது வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான கோட்பாடு. சில ஊடகங்கள் இதை பிரசுரிக்காது. ஏனென்றால் இங்குள்ள அரசு அவற்றை பிரசுரிக்க விடாமல் தடுத்துவிடும். இதுபோன்ற தடைகளை எல்லாம் தாண்டி, தமிழகத்துக்கான வளர்ச்சி பயணத்தை, வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொடுத்தே தீரும்.

மத்திய அரசின் முயற்சியால் கடல் வாணிபம், நீர்வழி போக்குவரத்தில் பாரதம் பெரும்புகழ் ஈட்டி வருகிறது. நம் துறைமுக திறன் இரண்டு மடங்காகி உள்ளது. தேசிய நீர்வழி போக்குவரத்து 8 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீர்வழி சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் எண்ணிக்கை 4 மடங்குஅதிகரித்துள்ளது. கப்பல் பயணிகள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்துக்கு பெரும் பயன் கிடைக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

தமிழக மக்கள் என் மீது அதிக அன்பு, பாசம் வைத்திருப்பதை கடந்த 2 நாட்களில் நன்றாக காணமுடிந்தது. இந்த சகோதர பாசம்,அன்புக்கு நான் மேலும் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்த அன்பைபல மடங்காக்கி கண்டிப்பாக திருப்பி தருகிறேன். மக்களின் அன்புடன் மாநில வளர்ச்சியை பெருக்குவேன். இது தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அளிக்கும் உத்தரவாதம்.

மத்தியில் 3-வது முறையாக நான்மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றியே தீருவேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

விழாவுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழி போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தலைமை வகித்தார். இணைஅமைச்சர்கள் ஸ்ரீபாத யெஸோ நாயக், சாந்தனு தாக்கூர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர் எ.வ.வேலு, இஸ்ரோ தலைவர் சோம்நாத், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலில் வெளியான விழா அழைப்பிதழில் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் பெயர் இருந்தது. ஆனால், கனிமொழி எம்.பி. பெயர்இல்லை. பின்னர் கீதா ஜீவன்பெயர் நீக்கப்பட்டு, கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டது. மேடையிலும் கீதா ஜீவனுக்கு இருக்கைஅமைக்கப்படவில்லை. இதனால், தமிழக அரசு சார்பில் பிரதமரை வரவேற்றும், வழியனுப்பியும் வைத்தகீதா ஜீவன், விழாவில் பங்கேற்கவில்லை.

ஹைட்ரஜன் பயணிகள் கப்பல், நெல்லையில் இரட்டை ரயில் பாதை: தூத்துக்குடியில் நேற்று நடந்த விழாவில், பல்வேறு துறைமுகங்களில் ரூ.766 கோடியில் 14 திட்டங்கள், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் ரூ.4,586 கோடியில் 4 திட்டங்கள் என மொத்தம் ரூ,5,352 கோடி மதிப்பிலான 18 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இதில், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட, கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட பயணிகள் கப்பலும் ஒன்று.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7,055.95 கோடியில் வெளி துறைமுக சரக்கு பெட்டக முனையம் உருவாக்குதல், ரூ.265.15 கோடியில் வடக்கு சரக்கு தளம்-3 இயந்திரமயமாக்கும் திட்டம் உட்பட பல்வேறு துறைமுகங்களில் ரூ.9,480 கோடியிலான திட்டங்கள், ரூ.124.32 கோடியில் 5 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ரூ.986 கோடியில் அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளம் என மொத்தம் ரூ.10,466 கோடியிலான 15 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

ரூ.78 கோடியில் 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரைவிளக்க சுற்றுலா மையங்கள், கொச்சி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு நிலக்கரி தளம் மறுசீரமைத்தல், ரூ.1,477 கோடியில் வாஞ்சி மணியாச்சி - திருநெல்வேலி, மேலப்பாளையம் - ஆரல்வாய்மொழி இரட்டை ரயில் பாதை என ரூ.1,555 கோடியில் 3 திட்டங்களை பிரதமர், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE