‘செல்வாக்கு...’ - செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்து உயர் நீதிமன்றம் அடுக்கிய காரணங்கள்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், செந்தில் பாலாஜி செல்வாக்குமிக்க நபராகவே நீடிக்கிறார் எனக் கூறி, அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன் முழு விவரம்:

செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் புதன்கிழமை தீர்ப்பளித்தார். அதில், “வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை எம்பி - எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பெறப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆதாரங்கள் திருத்தப்பட்டிருப்பதாக முடிவுக்கு வர எந்த காரணங்களும் இல்லை. ஆதாரங்கள் அனைத்தும் உண்மையானதுதான். எனவே, அந்த ஆதாரங்களின் மதிப்பை சந்தேகிக்க முடியாது.

இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில் பாலாஜி குற்றம்புரியவில்லை என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சாட்சிகளை கலைக்க மாட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்புதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறையில் இருந்த 8 மாதங்களில் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்ததும், அவருக்கு மாநில அரசு கொடுத்திருந்த முக்கியத்துவமும், அவர் அதிக செல்வாக்கு மிக்கவர் என்பதையே காட்டுகிறது.

அமைச்சர் பதவியிலிருந்து விலகினாலும்கூட ஆளுங்கட்சியின் எம்எல்ஏவாக நீடிப்பதால் அரசியலில் அவருக்கான செல்வாக்கு தொடர்கிறது என்று முடிவுக்கு வர எந்த தயக்கமும் இல்லை.

இந்த வழக்கில் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் சாட்சிகளாக இருப்பதால் அவர்கள் அச்சுறுத்தப்படலாம். ஏற்கெனவே இந்த வழக்கில் புகார்தாரர்களுடன் சமரசம் செய்யப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்து வேலைக்கு பணம் பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, பொது நலனை கருத்தில் கொண்டு, அவருக்கு ஜாமீன் பெற தகுதியில்லை என இந்த நீதிமன்றம் முடிவு செய்கிறது.

செந்தில் பாலாஜி ஜாமீன் பெற எந்த தகுதியும் இல்லை என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 8 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்து வருவதால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் சென்னை அமர்வு நீதிமன்றம் முடிக்க வேண்டும்’ என்று நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE