சென்னை: "காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக, அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழவேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
வண்டலூர் ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (பிப்.28) கலந்துகொண்டு உரையாற்றினார். முதல்வர் பேசுகையில், "தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடக்கின்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் காணொலி மூலமாக கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியை முடித்திருக்கின்ற 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கும் மற்றும் 429 காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 19 காவல் துணைக் கண்காணிப்பாளர்களில் 13 பேர் பெண்கள். 429 காவல் உதவி ஆய்வாளர்களில் 74 பேர் பெண்கள். காவல்துறையில் சமூகநீதி நிலைபெற்று வருவதன் அடையாளமாகதான் இதை நான் பார்க்கிறேன்.
இந்தக் காவல் உயர் பயிற்சியகத்தில் சட்டங்கள் குறித்த பாடங்கள் மட்டுமில்லாமல் பல்வேறு தரம் வாய்ந்த உயர்பயிற்சிகள் உங்களுக்கு கற்றுத் தரப்பட்டிருக்கிறது.இதன் மூலமாக, சமுதாயத்தில் எழுகின்ற புதுப்புது சவால்களை எதிர்கொள்வதற்கும், அனைத்துத் தரப்பட்ட மக்களுடைய வாழ்க்கைத்தரம் மற்றும் அவர்கள் அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கும் வழிவகை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திறமைகள் மூலமாக மக்களைக் காக்கின்ற மகத்தான பணிக்கு உங்களை முழுமையாக ஒப்படைத்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
» பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: இமாச்சல் பேரவை பரபரப்பு - நடந்தது என்ன?
» ‘பிடிஎஸ்’ குழு இசைக்கு அடிமையாகும் டீன்களுக்கு உளவியல் பிரச்சினையா?
காவல்பணி என்பது ஒரு வேலை இல்லை, அது சேவை. அதை நீங்கள் முழுவதும் உணர்ந்து பணியாற்றவேண்டும். நேர்மையாக கடமையை செய்வது மூலம், மக்களுடைய நன்மதிப்பை பெறமுடியும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் மட்டும்தான், காவல்துறையினரால் தங்களுடைய பணியை திறம்பட செய்ய முடியும்.
நம்முடைய அரசு, எல்லா தரப்பு மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதிலும், சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் உறுதி பூண்டிருக்கிறது. இன்றைக்குக் காவல் பயிற்சி முடித்து பணிக்குப் போகின்ற ஒவ்வொரு அதிகாரியும் அதை உறுதி செய்கின்ற வகையில், மக்களுடைய நண்பர்களாக திகழ்ந்து காவல்துறைக்கும், இந்த அரசுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
இன்றைக்கு பயிற்சி முடித்து களத்தில் இறங்குகின்ற நீங்கள்தான், நாட்டின் பாதுகாப்புக்கும், சமுதாய நன்மைக்குமான பாதுகாவலர்கள். எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பொதுமக்களை நேசிப்பது, சாதி மத வேறுபாடுகளை கடந்து எந்தவிதப் பாகுபாடும் காட்டாமல் சட்டத்தின் முன் எல்லோரையும் சமமாக நடத்துவது, சட்டத்தை மீறுபவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவது போன்ற காரணங்களால் தான், காவல்துறையை ‘பொதுமக்களின் நண்பன்’ என்று குறிப்பிடுகிறோம். அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் பணியாற்றவேண்டும்.
காவல் நிலையத்துக்கு வருகின்ற ஒவ்வொரு பாதிக்கப்பட்ட நபரிடம் ஆறுதலாக பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு காவல்துறைக்கும், சமூகத்துக்கும் இடையேயான உறவை வலுவாக்கவேண்டும். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் உங்களுக்கு இருக்கின்ற பங்கை ஆற்றுவது மூலமாக, அரசுக்கும், மக்களுக்கும் இடையே ஒரு நல்ல பாலமாக திகழவேண்டும்.
தொழில்நுட்பத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி குற்றங்கள் நடப்பதற்கு எந்த விதத்திலும் அனுமதிக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நல்லாட்சியின் இலக்கணம் என்பது மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்து தருவதுதான்.அப்படிப்பட்ட வாழ்க்கையை நம்முடைய அரசு அமைத்துத் தந்திருக்கிறது. அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். குற்றமற்ற சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருகின்ற அதேவேளையில், சட்டப் பரிபாலனைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் நீங்கள் முனைப்பு காட்ட வேண்டும்.
ஒரு குற்றம் மறுபடியும் நடக்காமல் இருப்பதற்கான நடைமுறைகளையும் ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய சேவைப் பணியில் இருக்கின்ற காவலர்களுடைய நலன் காக்க நம்முடைய அரசு தொடர்ந்து செயல்படும். இங்கே வந்திருக்கின்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீங்கள் கொடுத்த ஊக்கமும், ஆக்கமும்தான் இன்றைக்கு அவர்களை சமுதாயத்தில் பொறுப்புள்ள அதிகாரிகளாக உயர்த்தியிருக்கிறது. இவர்கள் இந்த நிலைக்குக் கொண்டு வர அயராது உழைத்த பயிற்சியகத்தின் காவல் உயர் அதிகாரிகள், அனைத்து அதிகாரிகள், மருத்துவக் குழு, அமைச்சுப் பணியாளர்கள், காவல் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், வாத்தியக் குழு உள்ளிட்ட அனைவரையும் நான் மீண்டும் பாராட்டுகிறேன். இந்தப் பயிற்சியகத்தில் சிறப்பாக பயிற்சியை முடித்திருக்கின்ற நீங்கள் களத்திலும் திறம்படப் பணியாற்ற என்னுடைய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago