“மக்களவைத் தேர்தலில் திமுக கூடாரத்தை கலைக்க வேண்டும்” - அண்ணாமலை பேச்சு @ நெல்லை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: "அடுத்த 60 நாட்கள், பாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் ஒரு போர்ப்படையைப் போல நின்றுகொண்டிருக்கிறோம். பாஜக மீது பொய் வழக்குப் போட்டு ஒடுக்கிவிடலாம், பத்திரிகையில் பொய் செய்தியைப் போட்டு பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிற திமுகவின் கூடாரத்தைக் கலைக்க வேண்டிய தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல்" என்று நெல்லையில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது: "கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் ஆட்சியை இன்றைக்கு தமிழகமே எதிர்பார்த்திருக்கிறது. இன்னொரு புறம் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி 400-க்கும் அதிகமான மக்களவை உறுப்பினர்களைப் பெற்று கம்பீரமாக ஆட்சியில் அமர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழகத்தின் திசை மாறி இருக்கிறது. ஓர் ஊழல் அரசு, குடும்ப ஆட்சி, தனக்கென்று வாழக்கூடிய ஒரு முதல்வர் இன்று ஆட்சியில் இருக்கிறார். ஆனால், பிரதமர் தூத்துக்குடியில், ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு, தூத்துக்குடி துறைமுகத்தின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் இங்கு வந்திருக்கிறார். நேற்று திருவனந்தபுரத்தில், விண்வெளிக்குச் செல்லும் 4 இந்தியர்களை அறிமுகப்படுத்திவிட்டு, இங்கு வந்து அமர்ந்திருக்கிறார். இப்படியாக ஒரு வளர்ந்த பாரதத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார் என்பதை பாருங்கள்.

இன்று காலை திமுக, ஒரு பத்திரிகை விளம்பரம் கொடுத்துள்ளனர். பிரதமர், முதல்வர் படங்களைப் போட்டு ஒரு சீன நாட்டின் ராக்கெட்டைப் போட்டுள்ளனர். நேற்று நமது பிரதமர், விண்வெளிக்குச் செல்லும் 4 இந்தியர்களை அறிமுகப்படுத்திவிட்டு வந்திருக்கிறார். இங்கு தமிழகத்தில் சீனாக்காரர்களின் படத்தை விளம்பரம் செய்கின்றனர். நாட்டுக்காக யார் இருக்கிறார்கள் என்பதை இதிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள்.

142 கோடி மக்களுக்காக வாழ்வது யார்? கோபாலபுரத்துக்காக யார் வாழ்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

பிரதமர் மோடி இந்தமுறை 400 எம்பிக்களுக்கு அதிகமாகப் பெற்று ஆட்சியில் அமரும்போது, தமிழகத்தில் இருந்து செந்நெல்லும், செந்தமிழுக்கும் சாட்சியாக இருக்கக்கூடிய திருநெல்வேலி மண்ணைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் பிரதமருக்கு ஆசீர்வாதம் கொடுத்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அடுத்த 60 நாட்கள், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் ஒரு போர்ப் படையைப் போல நின்றுகொண்டிருக்கிறோம். திமுகவின் பொய், அரசியல் அதிகார வரம்புமீறலை அகற்ற வேண்டும். பாஜக மீது பொய் வழக்குப் போட்டு ஒடுக்கிவிடலாம், பத்திரிகையில் பொய் செய்தியைப் போட்டு பரப்பிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருக்கிற திமுகவின் கூடாரத்தைக் கலைக்க வேண்டிய தேர்தல் 2024 மக்களவைத் தேர்தல்" என்று அண்ணாமலை பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE