“திமுகவும், காங்கிரஸும் அகற்றப்பட வேண்டிய கட்சிகள்” - நெல்லையில் பிரதமர் மோடி ஆவேசம்

By செய்திப்பிரிவு

நெல்லை: “திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன்.” என்று நெல்லை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று (பிப்.28) பிரதமர் மோடி தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக மீது விமர்சனங்களை முன்வைத்தார். பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “திருநெல்வேலி அல்வா போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள். இனிமையாகவும், இளகிய மனதுடனும் இருக்கிறவர்கள். நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு எனது நமஸ்காரங்கள். நாட்டுக்காக உழைக்க நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ஆசி தர வேண்டும்.

பாஜக ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. நேற்று திருப்பூர், மதுரை சென்றேன். இன்று நெல்லைக்கு வந்துள்ளேன். இங்கு தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக் கூடிய கட்சி. தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து வயதினரும் பாஜக மீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழகத்துக்காக நான் அளித்த அத்தனை வாக்குறுதியையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். இது எனது உத்தரவாதம். தமிழக மக்கள் எதிர்காலத்தை பற்றிய தெளிவுடன் இருப்பார்கள். ஏனெனில் தொழில்நுட்ப அறிவில் தமிழக மக்கள் சிறந்து விளங்குகின்றனர்.

தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வரத் தொடங்கியுள்ளனர். பாஜகவின் ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகில் வந்துள்ளது. இந்தியா இன்று 100 அடி முன்னேறுகிறது என்றால் தமிழகம் மிக வேகமாக 100 அடி முன்னேறும். இது மோடியின் உத்தரவாதம். பாஜகவின் அணுகுமுறை தமிழக மக்களின் சிந்தனையோடு ஒத்துப்போகிறது. இதனால் தமிழக மக்களுக்கு பாஜக மீது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழக மக்களின் நம்பிக்கையை பாஜக காப்பாற்றும்.

எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன். தமிழ் பேச முடியவில்லையே என வருத்தமாக உள்ளது. நான் பேசுவது புரியவில்லை என்றாலும் எனது மனதை தமிழர்கள் புரிந்துகொண்டுள்ளனர். தமிழர்கள், தமிழர்களின் பிள்ளைகளை முன்னேற்ற நான் இருக்கிறேன்.

நெல்லை மக்களின் ஆசியோடு மீண்டும் பிரதமர் பதவியில் அமர்வேன். பாஜக 400 இடங்களை பிடித்து 3வது முறையாக ஆட்சி அமைக்க ஆசி புரிய வேண்டும். நாட்டின் வளர்ச்சியை விட குடும்பத்தின் வளர்ச்சியே திமுகவுக்கு முக்கியம். தங்களின் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே திமுகவினர் குறிப்பாக இருக்கின்றனர்.

மோடி இருக்கும் வரை உங்கள் மீது யாரும் கை வைக்க முடியாது. தமிழகத்தில் இருந்து பட்டியல் சமூகத்தவரை அமைச்சராக்கி உள்ளோம். இந்தி, தமிழ் என பிரித்து பேசுகின்றனர். ஆனால் இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து எல்.முருகனை எம்பியாக்கி உள்ளோம். திமுகவும் காங்கிரஸும் நாட்டைப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கின்றன. அதேசமயம், பாஜக ஒவ்வொருவரையும் குடும்ப உறுப்பினராகவே கருதுகிறது. திமுகவும், காங்கிரஸும் நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி எங்கு தேடினாலும் கிடைக்காது. தங்கள் வாரிசுகளுக்காக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. நான் உங்களுக்காக இருக்கிறேன். சுயநலம் மிக்கவர்களை தமிழ்நாட்டு மக்கள் புறக்கணிப்பார்கள்.

தமிழகத்துக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என திமுகவினர் கேட்கிறார்கள். ராமர் கோயில் தொடர்பான விவாதங்களில் திமுக பங்கேற்கவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி பற்றி கேட்டால் திமுகவினரிடம் பதில் இல்லை. தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பாஜகவுக்கு நன்றாக தெரியும். தென்னிந்திய மக்களுக்காக பாஜக பாடுபடும். கடந்த தேர்தலில் பெற்ற இடங்களை விட இந்தத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர்களும் ஏற்கத் தொடங்கியுள்ளனர்.

எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அரசு இங்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது. மத்திய அரசு எந்த திட்டங்களைக் கொண்டுவந்தாலும் தமிழக அரசு குறை சொல்கிறது. நாட்டை கொள்ளையடிப்பதற்காக வளர்ச்சித் திட்டங்களை தடுத்து வருகின்றனர். திமுக அரசு வேலை செய்யவில்லை. ஆனால் கடன்களை வாங்கி குவிப்பதில் முதலிடம் வகிக்கிறது. திமுக அரசு எங்கள் திட்டங்களுக்கு புதிய பெயர்களைக் கொடுத்து அதை அவர்களுடைய திட்டங்கள் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் முன்னேற்றத்தை காண திமுக தலைவர்கள் தயாராக இல்லை. மேலும் அவர்கள் நமது விஞ்ஞானிகளையும், விண்வெளித் துறையையும், உங்கள் வரிப்பணத்தையும் அவமதித்துள்ளனர்.

தமிழக அரசுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை. உங்கள் வரியை உங்களுக்காக திட்டங்களாக வழங்குகிறோம். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அனுபவமும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டமும் என்னிடம் உள்ளது. தமிழ் மொழியிலேயே உயர் கல்வி படிக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி அவசியம். தமிழகத்தில் அதிக முதலீடுகளை கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். வந்தே பாரத் ரயில் திருநெல்வேலி மற்றும் சென்னையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை எளிதாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூரிய மின்சக்தித் திட்டங்கள், ஜவுளிப் பூங்காக்கள், துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்கள் போன்ற வளர்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

‘தேசம் தான் முதலில்’ என்ற தத்துவத்துடன் பாஜக செயல்படுகிறது. உலகளாவிய நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை மீட்டெடுக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளோம். பாகிஸ்தானில் இருந்து விமானி அபிநந்தனை பத்திரமாக அழைத்து வந்தோம்.

இலங்கையில் இருந்து மீனவர்களை அழைத்து வந்தோம். கத்தாரில் இருந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்களை அழைத்து வந்தோம். காங்கிரஸ் அரசு மற்றும் இண்டியா கூட்டணியால் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு குடிமகனைக் கூட மீட்க முடியவில்லை.

தமிழகத்தின் வளர்ச்சி என்ற போர்வையில் உங்களை கொள்ளையடித்துள்ளனர். இளைஞர்களின் கனவுகளையும் ஆசைகளையும் நசுக்கியுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம். மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைக்காவிட்டாலும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பவர்கள் மற்றும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு நிகரான வேகத்தில் தமிழகமும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது எனது தீர்மானம். கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் பல்வேறு எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட்டன. மதுரைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையை உறுதி செய்துள்ளோம்." இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்