திருப்பூர்: பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக்கு புகழாரம் சூட்டி பேசிய அவர், இண்டியா கூட்டணி கட்சிகள், நாட்டை கொள்ளையடிக்க முயற்சிப்பதாக கடுமையாக விமர்சித்தார்.
தமிழகம் முழுவதும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நேற்று மாலை நடந்த பாஜக பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். ‘வணக்கம் நண்பர்களே’ என்று தமிழில் உரையை தொடங்கி, அவர் பேசியதாவது: இங்கு திரண்டுள்ள மாபெரும் மக்கள்கூட்டம், காவிக் கடல்போல காட்சியளிக்கிறது. தமிழகம் எப்போதும் இந்த தேசத்தின் பக்கம் நிற்பதை இந்த கூட்டம் உணர்த்துகிறது.
தமிழகத்தில் இந்த 2024-ம் ஆண்டில் பாஜக பற்றிதான் அதிகம் பேசப்படுகிறது. தமிழ்நாடு இந்த ஆண்டில் ஒரு புதிய சரித்திரம் படைக்க இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாக, வரலாற்று சிறப்புமிக்க ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இதன்மூலம் அண்ணாமலை வெறும் யாத்திரையை மட்டுமே நடத்தவில்லை. அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்குமான வளர்ச்சி, நம்பிக்கையை வீடு வீடாக கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்.
தமிழகத்தில் அனைத்து சகோதர, சகோதரிகளும் இந்த யாத்திரைக்கு ஆதரவு அளித்துள்ளனர். வரலாற்றில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளனர்.
இந்த மண்ணையும், ஒவ்வொரு பாஜகதொண்டரையும் கடவுளுக்கு சமமாக கருதுகிறேன். தமிழ்மொழியும், தமிழ்பண்பாடும் எனக்கு மிகவும் நெருக்கமானது மட்டுமல்ல, மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால்தான், உலகில் எங்குபேசினாலும் இதன் சிறப்பை எடுத்துக் கூறுகிறேன். தமிழகத்துக்கும் எனக்குமானது வெறும் அரசியல் உறவு அல்ல. எனக்கு இது மனதோடு கலந்த, இதயம் தொடர்புடைய உறவாக கருதுகிறேன்.
சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரின் லால்சவுக் வரை யாத்திரையை வழிநடத்தினேன். அப்போது, ‘லால்சவுக்கில் மூவர்ணக்கொடியை ஏற்ற வேண்டும். அரசியல் சாசனத்தின் 370-வதுபிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்ற2 விஷயம்தான் என் மனதில் இருந்தது. அந்த இரண்டு சாதனைகளும் பாஜக ஆட்சியில் நடந்துவிட்டன.
தமிழகத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது இல்லை. ஆனால், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இதை இங்கு உள்ள ஒவ்வொரு சகோதர, சகோதரியும் நன்கு உணரத் தொடங்கியுள்ளனர்.
பல ஆண்டுகளாக தமிழகத்தைகொள்ளையடித்துக் கொண்டிருந்தவர்கள், இதை புரிந்து கொண்டுள்ளனர். பாஜக பலம் பெருகி வருகிறது, இதை தடுக்க வேண்டும் என்று, மக்களிடம் பொய்யை கூறி திசைதிருப்பி, சண்டை மூட்டி, விரோதத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் மக்களை பிரித்து வைத்து, தங்களது நாற்காலிகளை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களது கபட நாடகம் தற்போது வெளியே வந்துவிட்டது. அவர்களது ஊழல்கள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன. பாஜக மீது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. 2004-2014 காலகட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, தமிழகத்துக்கு கொடுத்ததைவிட, பாஜக அரசு 3 மடங்குஅதிகமாக வளர்ச்சிக்காக கொடுத்துள்ளது.
தமிழகத்தில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவசமாக அரிசி கொடுக்கிறோம். 40 லட்சம் பெண்களுக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்துள்ளோம். பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடு கட்டிக் கொடுத்துள்ளோம்.
ஜவுளி தொழிலுக்காக ரூ.20 ஆயிரம் கோடியில் ஜவுளி பூங்கா கொண்டு வந்துள்ளோம். இதன்மூலம் ரூ.2 லட்சம்கோடிக்கு வருவாய் ஈட்டும் நிலையைஎட்டியுள்ளோம். தொழில் முனைவோருக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டு வளர்ச்சிக்கு மோடியின் உத்தரவாதம் என்றால்,அது தமிழக வளர்ச்சியையும் சேர்த்துதான். இதுதான் மோடி உத்தரவாதம். இது இன்னும் பல ஆண்டுகள் தொடரும்.
தமிழக வருகையின்போது, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் நினைவுக்கு வந்தார்.மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரத்தைகொடுத்த அவரை இளைஞர்கள், பெண்கள் மிகப்பெரிய அளவில் மதித்தனர். இப்போதும் எம்ஜிஆரை ஒப்பற்ற தலைவர் என போற்றி புகழ்கின்றனர். அவர் குடும்ப அரசியல் காரணமாக ஆட்சிக்கு வந்தவர் அல்ல. துரதிர்ஷ்டவசமாக, அவரை கேவலப்படுத்துவதுபோல தமிழகத்தில் திமுகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர்.
எம்ஜிஆர் போலவே ஆட்சியை தந்தவர் ஜெயலலிதா. அவர் தன் வாழ்நாள் முழுவதையும் பொதுநலனுக்காகவும், மக்களின் வளர்ச்சிக்காகவும் கொடுத்தார். அவருடன் நெருங்கி பணியாற்றி உள்ளேன். அவருக்கு மீண்டும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
நாட்டின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வரும் என் மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் இருக்கின்றன. அதனால், அவதூறு பரப்பி, ‘மோடி உங்களுக்கு நல்லது செய்யமாட்டார்’ என பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. தமிழகம் போன்ற மாநிலத்தில் கொள்ளையடிப்பதற்காக மட்டுமே கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
நாட்டில் இண்டியா கூட்டணி ஜெயிக்காது என டெல்லியில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. தமிழகத்தில் மட்டும் எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என அந்த கூட்டம் முயற்சி செய்துகொண்டிருக்கிறது. 2024-ல் நாம் அந்தகடையை பூட்ட வேண்டும். அதற்கான பூட்டை ‘என் மண், என் மக்கள்’ யாத்திரைஉருவாக்கி உள்ளது.
தமிழகத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளிவைக்க மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர, தொண்டர்கள் வீடு வீடாக சென்று, மக்களின் ஆசிர்வாதத்தையும், வாக்குகளையும் பெற வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
இக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் மற்றும்விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவரும், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் இணை பொறுப்பாளருமான அமர்பிரசாத் ரெட்டி, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, கூட்டணி கட்சி தலைவர்கள் ஜி.கே.வாசன் (தமாகா), ஜான்பாண்டியன் (தமமுக), பாரிவேந்தர், ரவி பச்சமுத்து (ஐஜேகே), ஏ.சி.சண்முகம் (புதிய நீதிக்கட்சி), தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்) உள்ளிட்டோர் பேசினர். கூட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago