குடும்ப அட்டை உறுப்பினர் அனைவருக்கும் கை விரல் ரேகை பதிவு கட்டாயமா? - ரேஷன் கடை ஊழியர்கள் தவிப்பு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தமிழக அரசின் இரு மாறுபட்ட உத்தரவால், மத்திய அரசின் சலுகை பெறும் குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘கை விரல் ரேகை’ பதிவு கட்டாயமா? இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் கைவிரல் ரேகை பதிவை பெற முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள், 100 சதவீதம் இலக்கை அடைய முடியாமல் தவிக் கின்றனர். குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் ( ரேஷன் கார்டுகள் ) 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியா வசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது குடும்பத் தலைவர் கை விரல் ரேகையை ரேஷன் கடைகளில் பதிவு செய்து பொருட்கள், அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று வருகின்றனர். தற்போது மத்திய அரசின் மானியம் மூலம் உணவுப் பொருட்கள் பெறும் ஏழை, எளியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் பி எச். எச்., எனப்படும் ( PHH- Priorty House Hold ) குடும்ப அட்டை, மத்திய அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் ( AAY ) குடும்ப அட்டை குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் விவரங்களைப் புதுப்பிக்க ekyc ( இணைய வழியில் உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள் ) என்ற முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த கார்டு வைத்திருப்பவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எடுத்து, அரசு வழங்கும் சலகைகளும், திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் விசாரணையில்லாமலேயே வழங்கப்படுகிறது. இந்த நலத்திட்ட உதவிகள், சலுகைகளை தொடர்ந்து பெறுவதற்கு இந்த இரு வகை குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அதனால், தமிழக அரசு கை ரேகை பதிவதற்கு குடும்ப அட்டைதாரர்களை கடை ஊழியர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது கை விரல் ரேகை பதிவு வழங்காவிட்டாலும் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனால், தற்போது குடும்ப அட்டைதாரர்கள் பெரும்பாலானோர் கை ரேகை பதிவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், வட்ட வழங்கல் அதிகாரிகள், பி.எச்.எச். மற்றும் என்.பி.எச்.எச் குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரிடமும் 100 சதவீதம் கை ரேகை பெற வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களிடம் வாய் மொழியாக உத்தரவிட்டு நெருக்கடி கொடுக் கின்றனர்.

இது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: அரசு கைவிரல் ரேகை பதிவு கட்டாயமில்லை எனக் கூறுகிறது. ஆனால், அதிகாரிகள் பி.எச்.எச்., மற்றும் என்.பி.எச்.எச் குடும்ப அட்டை உறுப்பினர்களிடம் ரேகை பெற கட்டாயப்படுத்துகின்றனர். 5 வயதுக்கு உட்பட்டவர்களிடம் கைரேகை பெறத் தேவையில்லை எனக் கூறுகின்றனர். ஆனால், 5 வயது நிரம்பிய குழந்தைகள் பலரின் ரேகை பதிவாகவில்லை. கைரேகை பதிவாகா விட்டால் கருவிழி பதிவு செய்யச் சொல்கின்றனர்.

கரு விழி பதிவு செய்யும் கருவி அனைத்து ரேஷன் கடைகளிலும் இல்லை. அதனால், கை விரல் ரேகை, கருவிழி பதிவு பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் வீட்டுக்கு செல்லும் போது அனைவரும் வீட்டில் இருப்பதில்லை. சிலர் வேலைக்கு சென்று விடுகின்றனர். அரசின் குழப்பமான இரு முடிவால் பொதுமக்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறினர்.

இது குறித்து மாவட்ட வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மத்திய அரசின் சலுகைகள் பெறும் குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களை ஆய்வு செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாலேயே நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் கைவிரல் ரேகை பதிவு பெறும்படி கூறுகிறோம் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE