செல்போன், செயின் பறிப்புகள் முற்றிலும் குறைய என்ன வழி?- வழிகாட்டுகிறார் மூத்த வழக்கறிஞர் ரமேஷ்

By மு.அப்துல் முத்தலீஃப்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்களைப் பாதிக்கும் அதிக பிரச்சினைகளில் முக்கியமானது செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு. இதைத் தடுக்க என்னதான் வழி?

பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, பார்த்து பார்த்து வாங்கிய நகைகள்தான் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களின் சேமிப்பாக இருக்கிறது. ஒரு நடுத்தர குடும்பத்தில் தங்க நகைகளை பெண்கள் அணிவது அலங்காரத்திற்காக மட்டும் அல்ல. அந்தக் குடும்பத்தின் கல்வி, முக்கியச் செலவுகள், மருத்துவச் செலவுகள் என நெருக்கடிமிக்க காலகட்டத்தில் நகைகள் உதவுகின்றன.

பெண்கள்  அணிந்து செல்லும் நகைகள் சில நிமிடங்களில் செயின் பறிப்பு நபர்களால் பறித்துச் செல்லப்படும் கொடூரம், செயின் பறிப்பின் போது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் காயம், அவமானம், நகையைப் பறிகொடுத்த  மன உளைச்சல், வாழ் நாள் சேமிப்பு பறிபோனதே என்கிற தவிப்பு வலியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது.

நகையைப் பறிகொடுத்தவுடன் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து சிஎஸ்ஆர் பெறவும் பின்னர் வழக்குப் பதிவு செய்யவும் சாதாரண மக்கள் படும் பாடு சொல்லி மாளாது.

 'நீ ஏன் அவ்வளவு நகை அணிந்து சென்றாய்', '2 பவுனை 10 பவுன் என்கிறாயா?', 'இரண்டு நாள் தேடுங்கள் ஆள் சிக்குகிறானா பார்ப்போம்?',  'நகை காணாமல் போனதாக எழுதிக்கொடு, பறிக்கப்பட்ட நகைக்கு பில் கொண்டு வா', 'ஆய்வாளர் இல்லை நாளை வாருங்கள்' என்று வெவ்வேறு வடிவங்களில் அலைகழிக்கப்படும்போது நகையைப் பறிகொடுத்ததை விட அதிக மன உளைச்சல் புகார் அளிப்பது என்றாகிப் போனது.

நகையைப் பறிகொடுத்தவர்களின் நிலை இப்படி என்றால் செல்போனைப் பறிகொடுத்தவர்கள் நிலையை கேட்கவே வேண்டாம். ஆன்லைனில் தேடித்தேடி அமேசான், ப்ளிப்கார்ட் என பார்த்து பார்த்து மாடலைப் பிடித்து, இஎம்ஐ மூலம் மாதா மாதம் பணம் செலுத்தும் வகையில் 20 ஆயிரம் 30 ஆயிரம் கொடுத்து வாங்கப்படும் செல்போன்களை ஒரு நொடியில் பறித்துச் செல்கின்றனர். சாதாரணமாக சாலையில், பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் செல்போனை வெளியில் எடுத்தால் மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்கள் வெகு சாதாரணமாக பறித்துச் செல்கின்றனர்.

மறுபுறம் பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் பாக்கெட்டிலிருந்தே சாதாரணமாக பறித்துச் செல்கின்றனர். தற்போது இதை எல்லாம் கடந்து பகிரங்கமாக கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துச் செல்வதும் நடக்கிறது. அதிகாலையில் வாக்கிங் செல்வோர், பால் வாங்க வெளியில் செல்வோர் மிரட்டப்பட்டு, அவர்களின் செல்போன் பறிக்கப்படுகிறது.

நள்ளிரவில் தனியே செல்பவர்கள் கதியை கேட்கவே வேண்டாம்.அந்த அளவுக்கு மிரட்டிப் பணம் பறிக்கப்படுகிறது. சமீபத்திய உதாரணம் பெரும்பாக்கத்தில் மென்பொறியாளர் லாவண்யா கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி பிழைத்துள்ளார். இன்றுவரை அவர் மருத்துவ சிகிச்சையில்தான் உள்ளார்.

இதைவிட சோகம் நுங்கம்பாக்கத்தில் வசித்த ரஞ்சித் என்ற மாணவரின் கொலை. குடும்பத்திற்கு ஒரே ஆதரவாக இருந்த 19 வயது மாணவன் ரஞ்சித் செல்போன் பறிப்பு இளைஞர்களால் கொலை செய்யப்பட்டார். இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும் என்பதுதான் அதிர்ச்சி அலையை எழுப்புகிறது.

இதைத் தடுக்கும் வழியைப் பற்றி போலீஸார் யோசிக்காத வரையில் இது சென்னையின் சாதாரண, நடுத்தர, ஏழை மக்களைப் பாதிக்கும் நிகழ்வுகள் தொடரும் என்பதுதான் கசப்பான உண்மை.

செயின் பறிப்புகள் செல்போன் பறிப்புகள் நிகழ்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? செல்போன், செயின் பறிப்புகளில் திருடர்கள் பிடிபடுகிறார்கள், செல்போன் நகைகள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால் யாரிடமிருந்து இவை பறிமுதல் செய்யப்பட்டது?

திருடியவர்கள் காசாக்கிவிட்டாலும்,  வழிப்பறி நகைகள், செல்போன்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எனபது குறித்து ஒரு தகவலும் இல்லையே? ஏன் என்ற கேள்வி எழுந்தது.

சென்னையில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான சம்பவங்களில் செல்போன்கள் பறித்துச் செல்லப்படுகின்றன. ஆனால் இவை எங்கே விற்கப்படுகின்றன. எங்கு செல்கின்றன?

சென்னையில் திருட்டு செல்போன்களை வாங்கி வெளி மாநிலங்களுக்கு மொத்தமாக கடத்தும் வியாபாரிகள் யார், செல்போன்களை வாங்கி ஐ.எம்.இ.ஐ எண்களை மாற்றி சென்னையிலேயே விற்பனை செய்யப்படுகிறதே இது தொடர்பான  போலீஸாரின் நடவடிக்கை என்ன?

வழிப்பறி செய்பவர்களைப் பிடித்து தண்டனை கொடுக்கும் போலீஸார், வழிப்பறி செய்யப்படும் பொருட்களை வாங்கும் நபர்களிடம் பொருட்களை மட்டுமே பறிமுதல் செய்வது மட்டுமே நடவடிக்கையா? திருட்டு நகைகளை, பொருட்களை வாங்குபவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்விகளுடன் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷை 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் சந்தித்தோம்.

 

download 7jpg

 

நகைகளை திருடுபவர்கள் மட்டுமல்ல அதை வாங்கும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2010-ம் ஆண்டு அப்போதைய காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியிருந்தார். அப்படி எதுவும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது?

ஒரு காலத்தில் நகை திருட்டு போனால் திருட்டு நகைகளை வாங்குபவர்களை போலீஸார் பிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். அதைப் பார்க்கும் யாரும் இனி அப்படி வாங்கவே யோசிப்பார்கள்.

அதற்கு தனி செக்‌ஷனே உள்ளது. இந்திய தண்டனைச்சட்டத்தில் திருட்டுப் பொருட்களை வாங்கினால் நடவடிக்கை எடுக்க பிரிவு 411 தனியாக உள்ளது. இதற்காக புதிதாக முயற்சி எடுக்க வேண்டாம் ஏற்கனவே இருக்கும் 411 பிரிவின் கீழேயே நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு.

முன்பெல்லாம் ஒரு திருட்டு சைக்கிளை வாங்கினால் கூட இந்த செக்‌ஷனின் கீழ் நடவடிக்கை எடுத்தார்கள். திருட்டு நகைகளை வாங்கியவர்கள் அடகுக் கடைக்காரர்கள் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீஸார் நீங்கள் ஏன் திருட்டுப் பொருட்களை வாங்குகிறீர்கள் அதை நிறுத்துங்கள் என்று கூறினார்கள். அப்போது அப்படி வாங்குவதும் குறைந்தது.

தற்போது இருக்கும் பிரச்சினை என்ன? ஏன் இவ்வளவு குற்றங்கள்?

செல்போன் பறிப்பில் இரண்டு தரப்பிலும் குறைபாடு இருக்கிறது என்று கூறுவேன். ஒன்று போலீஸ் குறைபாடு, இன்னொன்று சைபர் பிரிவு போலீஸ் குறைபாடு என்று சொல்லலாம். தற்போது செல்போன் பறிப்பு எந்த அளவுக்கு திருடு போகிறதோ, அந்த அளவுக்கு கண்டுபிடிக்கக்கூடிய தகவல் தொழில் நுட்பமும் போலீஸிடம் உண்டு.

ஐ.எம்.இ.ஐ நம்பர் வைத்து கண்டுபிடிக்கலாம், செல்போன் சிம் கார்டை தூக்கிப்போட்டால் கூட அந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண் உதவியுடன் உடனடியாக கண்டுபிடிக்கலாம். உடனடியாக செல்போன்களை ட்ரேஸ் செய்து ஆக்டிவேஷனில் இருக்கிறதா என்று டவர் பார்க்கலாம். ஐ.எம். இ.ஐ. நமபரை உடனடியாக ட்ரேஸ் செய்து உடனடியாக 10 பேரைப் பிடித்தால் அவர்கள் மூலம் யாரிடம் திருட்டு செல்போனை வாங்கினார்கள், யார் வழிப்பறி செய்பவர்கள் என்று கண்டுபிடிக்கலாம். எளிதாக இதற்கான நெட்வொர்க்கை பிடித்து விடலாம்.

நகைகளை கூட உருக்கி விற்றுவிடுவார்கள், கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவார்கள், ஆனால் செல்போன் விஷயத்தில் இது போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிடிக்கலாம்.

இதற்கு போலீஸார், சைபர் பிரிவு போலீஸாருடன் இணைந்து எளிதாக செல்போன் பறிக்கும் நபர்களைப் பிடிக்கலாம். இது அதிகம் இழுபறியாகும் வேலை, சைபர் கிரைமுக்கு பரிந்துரைக்க வேண்டும் அங்கிருந்து வர வேண்டும் என்பதால் போலீஸார் செல்போன் பறிப்புகளில் வழக்குப் பதிவு செய்ய யோசிக்கிறார்கள், தவிர்க்கிறார்கள்.

'நீ ஏன் அஜாக்கிரதையாக பேசிக்கொண்டு சென்றாய்' என்று பாதிக்கப்பட்டவர்களை எதிர் கேள்வி கேட்டு புகாரை ஏற்க மறுத்து தவிர்க்கப்பார்க்கிறார்கள். அதனால் சைபர் பிரிவுக்கு பரிந்துரை செய்து செல்போன் எங்கிருக்கிறது என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

ஆனால் அழுத்தம் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வைத்தாலும் அதை முழுவதுமாக சைபர் பிரிவுக்கு அனுப்பி அதை தொடர்ச்சியாக கண்காணித்து அந்த நடைமுறைகளை கடைபிடிக்க மறுக்கிறார்கள். ஒரு செல்போன் தானே என்று தட்டிக்கழிக்கிறார்கள். இது ஒரு செல்போன், இரண்டு செல்போன் என்ற கணக்கல்ல. குற்றத்தின் பின்னணியை ஆராய்ந்தால் பெரிய அளவில் உள்ளது.

திருடுபவர்களைப் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?

திருடுபவர்களைப் பிடிக்க திருட்டுப் பொருட்களை வாங்கும் நபர்களையும் தண்டித்தால் மட்டுமே திருட்டு செல்போன்களை வாங்குவதற்கு பயப்படுவார்கள், செல்போன் பறிப்புகள் குறையும். திருடும் நபர்  ரூ.5000 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை 500 ரூபாய்க்கு விற்றுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போய்கிட்டே இருப்பார்.

சைபர் பிரிவு தாமதப்படுத்துவதால் இத்தகைய செல்போன்கள் மொத்தமாக வெளி மாநிலங்களுக்கு விற்கப்படுவதாக கூறுகிறார்களே?

அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் ஒரு செல்போன் தானே என்று நினைக்காதீர்கள். உடனடியாக அதை ஐஎம்இஐ எண் மூலம் உடனடியாக கண்காணித்து பிடித்தால் இந்த நெட்வொர்க்கே சிக்கும். மேலும் வெளிமாநிலங்களுக்கு மொத்தமாக செல்கிறது என்று எடுத்துக்கொண்டால் கூட உள்ளூரில் சில்லறையாக வாங்கி விற்கும் நிலையும் இருக்கிறதே. போலீஸார் உடனடியாக செயல்பட்டு ஐஎம்இஐ நம்பர் மூலம் பிடித்து அங்குள்ள போலீஸார் மூலம் அந்த நபரை பிடித்து யாரிடம் வாங்கினாய் அந்த கடைக்காரரை பிடிப்பது என கண்காணித்து பிடிப்பது சுலபம். ஆனால் ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒரு செல்போன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு மணி பர்ஸ் மாதிரி, தகவல் களஞ்சியம் மாதிரி, ரகசிய தகவல்கள், டேட்டாஸ், போட்டோக்கள், வீடியோக்கள், தொடர்பு எண்கள் இருக்கும். ஒரு நொடியில் அதை பறிகொடுக்கும்போது அவரது அனைத்து விவரங்களையும் இழக்கிறார். முக்கியமான போட்டோக்கள், வீடியோக்கள் சிக்கக்கூடாதவர்கள் கையில் சிக்குகிறது. இதை ஒரு செல்போன் தானே பறிபோகிறது என்று சாதாரணமாக பார்க்கக் கூடாது.

போலீஸ் சைபர் கிரைமில் பரிந்துரைத்து வாங்குபவர்கள், விற்பவர்கள் இருவரையும் பிடிக்க வேண்டும்.

இதைத் தவிர்க்கவும் நெறிப்படுத்தவும் என்ன செய்ய வேண்டும்? அப்பாவிகள் கூட தெரியாமல் வாங்கி சிக்க வாய்ப்புள்ளதே?

செல்போன் எல்லோருக்கும் சிம்கார்ட் இல்லாமல் கிடையாது. சிம் கார்டுக்கு ஆதாரம் ஆதார். திருட்டு நகை, செல்போன்களை வாங்குவதை தடுக்க போலீஸார் சுற்றறிக்கை போட்டு நியாயமாக கஷ்டத்திற்கு விற்பவர்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இனி நகைகளை அடகு வைப்பவர்கள் அந்த நகைக்காக ஆதார் அல்லது ரேஷன் அட்டை போன்றவற்றை அளித்து அடகு வைக்கலாம் என்று கூறலாம்.

காரணம் திருடுபவர்கள் அதை விற்க முயல்வதில்லை. அந்த நேரத்திற்கு அடகு வைத்து காசாக்கப் பார்க்கிறார்கள். அதற்கு யாரிடமாவது கொடுத்து அடகு வைக்கிறார்கள். இப்படி அடையாள அட்டை கேட்பதன் மூலம் அவர்களுக்கு அடகு வைக்க ஆள் கிடைக்க மாட்டார்கள். அடகுக் கடைக்காரர்களும் வாங்க யோசிப்பார்கள்.

மறுபுறம் செல்போன் வாங்கி விற்பவர்கள் தன்னிடம் செல்போனை விற்க வருபவர்களிடம் இந்த மாடல் செல்போன், ஐஎம்இஐ எண்ணை போட்டு இந்த ஆதார் அட்டை உள்ள நபர் செல்போனை விற்றார் என்று ஒரு ஜெராக்ஸ் காப்பி வாங்கினால் திருடுபவர் விற்க வர மாட்டார். இடையில் புரோக்கராக விற்க வருபவனும் விற்கவர மாட்டார். வியாபாரியும் தெரியாமல் வாங்கிவிட்டேன் என்று கூற முடியாது.

ஏன் இப்படி அதிக அளவில் நடக்கிறது?

முக்கிய காரணம் சினிமா என்பேன். ஒரு படத்தில் காதலிக்கு செல்வு செய்ய 40 ஆயிரம் ரூபாய்க்காக கதாநாயகன் செயின் பறிப்பார். இதைப் பார்க்கும் இளைஞர்கள் மனது எப்படி யோசிக்கும். இதை தவறு இல்லை என்றுதான் நினைக்கத்தோன்றும்.

இன்று செல்போன் பறிப்பவர்கள் செயின் பறிப்பவர்கள் யாரும் பசிக்காகவோ, அம்மாவுக்கு மருந்து வாங்க வேண்டும், குடும்ப கஷ்டம் போன்ற காரணங்களுக்காக குற்றம் செய்வதில்லை. போதைப் பழக்கம், ஆடம்பர செலவு, சொகுசு வாழ்க்கை ஆகிய காரணங்களுக்காகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

திருட்டுப்பொருட்களை வாங்குபவர்கள் மீது எப்படிப்பட்ட தண்டனை விதிக்க முடியும்?

திருடப்பட்ட பொருட்களை வாங்கும் சட்டம் 411 ஐபிசியின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். திருடியவர் நகையை வாங்குவதும் கடுமையான குற்றம், அதன் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்தாலே இதுபோன்று வாங்குவது குறைந்துவிடும். மூன்று வருடம் தண்டனை கிடைக்கும் என்றால் எந்த வியாபாரி வாங்குவார்.

நீங்கள் அடகுப் பொருளை, வியாபாரம் செய்ய செல்போனை வாங்குங்கள் தப்பில்லை. இன்னாரிடம் வாங்குகிறேன் என்று ஆதார் ஜெராக்ஸ் வாங்கினால் இரு பக்கமும் பாதுகாப்பு. திருடியவர், ஆதார் ஜெராக்ஸை கொடுக்கத் துணிவாரா? இது போன்று பத்து பேரை பத்து வழக்கில் போலீஸார் கைது செய்யட்டும். பின்னர் திருட்டுப் பொருட்களை யாருக்காவது வாங்கத் துணிவு வருமா? வாங்க ஆட்கள் இல்லை என்றால் திருடுபவர் திருட முயல்வாரா?

இதில் அப்பாவி வியாபாரிகள் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

வாய்ப்பே இல்லை. தெரியாமல் திருட்டுப் பொருளை வாங்கும் நபர் 411 பிரிவில் சிக்க மாட்டார். ஆனால் எப்போதுமே தெரியாமல் வாங்கிவிட்டேன் என்று ஒரு வியாபாரி கூற முடியாது அல்லவா? அதற்குத்தானே ஆதார் அடையாள அட்டையின் ஜெராக்ஸை வாங்க வேண்டும் என்கிறோம். போலீஸார் வந்தாலும் இந்த நபரிடம் வாங்கினேன் என்று கைகாட்டிவிட்டு போய் விடலாம்.

தற்போது வழிப்பறியை திருட்டு குற்றத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்வது சரியா?

தவறானது. திருட்டு என்பது ஒருவரின் பொருளை அவருக்கு தெரியாமல் எடுப்பது திருட்டு. அது சாதாரண குற்றம், தண்டனையும் குறைவு. செயின் பறிப்பு என்பது வழிப்பறி அது பெரிய குற்றம். அதற்கு தண்டனை அதிகம். வழிப்பறியை வழிப்பறி என்று போட்டால் தான் வழிப்பறி குறையும். அதற்கு தண்டனையும் அதிகம் இதை தெரிந்தே போலீஸார் செய்கிறார்கள்.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்