“ஊழல்களின் உறைவிடம் பாஜக தான்!” - மோடியின் பல்லடம் பேச்சுக்கு கே.பாலகிருஷ்ணன் எதிர்வினை

By செய்திப்பிரிவு

சென்னை: "ரபேல் ஊழல் துவங்கி, சிஏஜி வெளிப்படுத்திய முறைகேடு, பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்தியிலும் அதன் அமைச்சர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வரை ஊழல்களின் உறைவிடமாக திகழ்வது பாஜக ஆட்சிதான். இவர் இண்டியா கூட்டணி பற்றி பேசுவது வெட்கக்கேடு. அண்ணாமலை யாத்திரையின் மூலம் இண்டியா கூட்டணிக்கு பூட்டுப் போடப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். உண்மையில் வரும் தேர்தலில் பாஜகவையும் அதனோடு கூட்டணி சேரும் கட்சிகளையும் தமிழக மக்கள் துடைத்தெறிவார்கள் என்பது நிச்சயம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மண் - என் மக்கள்” என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய பாதயாத்திரையை சுயமரியாதையும், பகுத்தறிவுமிக்க தமிழக மக்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆனால், இதனுடைய நிறைவு விழா என்ற பெயரில் பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வழக்கம் போல தமிழக மக்களுக்காக உருகி உருகி பேசியுள்ளார்.

பாஜக தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியில் இல்லையென்ற போதும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் இருக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால், புயல், வெள்ளம் என தமிழகம் இயற்கை இடற்பாடுகளால் தவித்த போது, இதயத்தில் இரக்கமே இல்லாமல் நடந்து கொண்ட ஆட்சி தான் நரேந்திர மோடி ஆட்சி என்பதை தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

கொங்குமண்டலம் ஜவுளித் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியென்றும் சிறு-குறு நிறுவனங்கள் மிகுந்த பகுதி என்றும் பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் நசிந்துவிட்டது என்பதுதான் உண்மை. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் அழியும் நிலையில் உள்ளது.

திருப்பூரில் ஜவுளித் தொழில் 40 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளது. நூல் விலை உயர்வு 90 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது. பஞ்சு இறக்குமதிக்கும் அனுமதி இல்லை. மறுபுறத்தில் வங்க தேசத்திலிருந்து ஆயத்த ஆடைகளை ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்வதால் திருப்பூர் பனியன் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழிலுக்கு சலுகை வழங்காத மோடி ஆட்சி கார்ப்பரேட் முதலாளிகளையே கொழுக்க வைத்தது. சிறு குறு தொழில்களை அழித்துவிட்டு அதையே பெருமையாக பேசுகிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு 2024ம் ஆண்டு ஒரு புதிய சரித்திரத்தை படைக்க இருக்கிறது என்று மோடி கூறியுள்ளார். ஆம். உண்மை தான். பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை அடியோடு துடைத்தெறிந்து புதிய வரலாற்றை தமிழ்நாடு வரும் தேர்தலிலும் படைக்கத்தான் போகிறது.

தமிழ்மொழியும் அதன் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும், அதனால் தான் ஐநா சபையில் பேசும் போது தமிழ் கவிதைகளை குறிப்பிட்டேன் என்றும் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. ஆனால், இந்தியாவிலோ தமிழ் உள்ளிட்ட தாய் மொழிகளை தள்ளி வைத்து இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார், முனைப்பு காட்டுகிறார் மோடி. ஐநா சபையில் தமிழில் பேசிய இவர் தமிழ் உள்ளிட்ட மொழிகளை மத்திய ஆட்சி மொழிகளாக அறிவிக்க மறுப்பது ஏன்?.

நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தேன் என்று பீற்றிக்கொள்கிறார் பிரதமர். செங்கோல் அரசியலையும் மன்னராட்சி காலத்தையும் தாண்டி இந்தியா மக்களாட்சிப் பாதையில் வெகுதூரம் முன்னேறிவிட்டது. ஆனால், இவரோ மன்னர் கால மமதையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இதற்காகத்தான் குடியரசு தலைவரைக் கூட அழைக்காமல் நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளார்.

அரசியல் சட்டப்பிரிவு 370-வது பிரிவை ரத்து செய்தது, தம்முடைய பெரிய சாதனை என்கிறார். ஆனால், காஷ்மீர் ரோஜாவில் இன்னமும் ரத்தம் வழியுமளவுக்கு அந்த மாநிலத்தையே துண்டாடிய ஆட்சி இவருடைய கொடுங்கோல் ஆட்சி என்பதை இந்திய மக்கள் மறக்கமாட்டார்கள். தமிழக மக்கள் புத்திசாலிகள் என்று சான்றிதழ் வழங்கியுள்ளார். பிரதமர் கூறுவது உண்மை தான். அதனால் தான் தமிழகம் எப்பொழுதும் மதவெறி பாஜகவை நிராகரித்து மதச்சார்பின்மையின் பக்கமே நின்று கொண்டிருக்கிறது.

தமிழகத்துக்கு இவரது ஆட்சி இழைத்து வரும் நயவஞ்சகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள். வரி பங்கீட்டில் அநீதி இழைப்பதையும், இயற்கை பேரிடர் நிதி வழங்க மறுப்பதையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒற்றைச் செங்கல்லோடு முடித்துக்கொண்டதையும், கீழடி அகழாய்வுகளில் மண்ணள்ளி போட்டதையும் மறக்க மாட்டார்கள். ரபேல் ஊழல் துவங்கி, சிஏஜி வெளிப்படுத்திய முறைகேடு, பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்தியிலும் அதன் அமைச்சர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் வரை ஊழல்களின் உறைவிடமாக திகழ்வது பாஜக ஆட்சி தான். இவர் இண்டியா கூட்டணி பற்றி பேசுவது வெட்கக்கேடு.

அண்ணாமலை யாத்திரையின் மூலம் இண்டியா கூட்டணிக்கு பூட்டுப் போடப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். உண்மையில் வரும் தேர்தலில் பாஜகவையும் அதனோடு கூட்டணி சேரும் கட்சிகளையும் தமிழக மக்கள் துடைத்தெறிவார்கள் என்பது நிச்சயம்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்