அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு (பிப்.28) சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை நீதிபதி புதன்கிழமைக்கு (பிப்.28) தள்ளிவைத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை பிப்.28, பிப்.29, மார்ச் 5-ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும் என்று அறிவித்தார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6-ம் தேதிகளிலும், அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேதிகளில் வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு வழக்கறிஞர்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், மார்ச் 8-ம் தேதி வாதங்களை தொடங்கி 11-ம் தேதி நிறைவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE