காங்கிரஸ் கட்சிக்கு ‘விக்கெட்டுகள்’ வரும்: புதுச்சேரி காங். தலைவர் வைத்திங்கம்

By வீ.தமிழன்பன்

காரைக்கால்: “ஒவ்வொரு விக்கெட்டாக விழும் என்றால், நம்மிடம் ஒவ்வொரு விக்கெட்டாக வரும்” என புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வி.வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி, மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்களுக்கான பூமி பூஜை ஆகியன இன்று (பிப்.27) நடைபெற்றன. இதில் வி.வைத்திலிங்கம் கலந்து கொண்டு நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

கோட்டுச்சேரி பிரதான சாலையில், ரூ.20.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, வணிக வளாகத்தை திறந்து வைத்தப் பின்னர், அவர் கூறியது: “பாஜகவினர் மாற்றுக் கட்சிகளிலிருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது என்பது உலகறிந்த ரகசியமாக உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குகளை செல்லாதவைகளாக்கி முடிவை மாற்றினர். இதுவே ஓர் உதாரணம். பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு அதை மாற்றியது. இது பாஜகவின் கலாச்சாரம். இதை யாரும் மாற்ற முடியாது. பாஜகவினர் என்ன செய்வார்கள் என்பது மக்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்” என காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும், “புதுச்சேரி் மாநிலத்தில், பாஜகவில் சட்டப்பேரவைத் தலைவரும், துணைநிலை ஆளுநரும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். இந்த சண்டைக்கே இன்னும் பஞ்சாயத்து முடியவில்லை. இதில் யார் காங்கிரஸ் கட்சிக்கு வரப்போகிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார்,

பாஜகவிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வரவுள்ளனரா என்று கேட்டதற்கு, “ஏன் வரக் கூடாது ? உலகில் எது வேண்டுமானலும் நடக்கும்” என்றார். ஒவ்வொரு விக்கெட்டாக விழும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது குறித்து கேட்டதற்கு, “அங்கு ஒவ்வொரு விக்கெட்டாக விழும் என்றால், நம்மிடம் ஒவ்வொரு விக்கெட்டாக வரும்” என்றார்.

இந்நிகழ்வில் புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், காரைக்கால் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திர மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE