சென்னை: “அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய 17 ஆசிரியர் பணியிடங்களை பொதுப் போட்டிப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சமூக நீதிக்காக உழைத்தவர்களில் முதன்மையானவர் தந்தைப் பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சமூக நீதி சூறையாடல்கள் நடைபெறுவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 12 பேராசிரியர்கள் உள்ளிட்ட 26 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு (சிண்டிகேட்) ஒப்புதல் அளித்திருக்கிறது. 26 ஆசிரியர் பணியிடங்களில் 17 பணியிடங்கள் அருந்ததியர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், அந்த இடங்கள் பொதுப் போட்டிப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதும், அதற்கு தமிழக அரசே ஆதரவளித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது.
பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவின் 114-ஆம் கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் நாள் நடைபெற்றது. அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த நிலையில், கூட்டத்தின் முடிவுகள் இப்போது தான் வெளியிடப்பட்டுள்ளன. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 12 பேராசிரியர்கள், 9 இணைப் பேராசிரியர்கள், 5 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 26 ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.
இந்தப் பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்புவது வரவேற்கத் தக்கது தான். ஆனால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையான 200 புள்ளி ரோஸ்டர் விதிகளுக்கு முரணாக அனைத்துப் பணியிடங்களும் பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது சமூக அநீதியாகும்.
» பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
» வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: ராமதாஸ்
பெரியார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படவிருக்கும் 26 பணியிடங்களில் 10 பேராசிரியர்கள், 5 இணைப் பேராசிரியர்கள், 2 உதவிப் பேராசிரியர்கள் என மொத்தம் 17 பணியிடங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்பப்பட்டவையாகும்.
200 புள்ளி ரோஸ்டர் விதிப்படி, மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படும்போது, முதல் பணியிடம் பொதுப்போட்டி பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியல் வகுப்பு (அருந்ததியர்), மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, நான்காவது பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, ஐந்தாவது இடம் பொதுப்போட்டி பிரிவு, ஆறாவது இடம் பட்டியலினம், 15-ஆவது இடம் இஸ்லாமியர்கள், 50-ஆவது இடம் பழங்குடியினருக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இந்த 17 பணியிடங்களும் மீண்டும் பொதுப்போட்டிப் பிரிவில் நிரப்புவதை அனுமதிக்கவே முடியாது.
பொதுப்போட்டிப் பிரிவில் முதல் முறை நிரப்பப்பட்ட பணியிடத்தை அடுத்த முறை அருந்ததியரைக் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்பதற்கு பெரியார் பல்கலைக்கழகத்திலேயே முன்னுதாரணங்கள் உள்ளன. இப்போது நிரப்பப்படவுள்ள 12 பேராசிரியர் பணியிடங்களில் ஒன்றான ஆங்கிலத்துறை பேராசிரியர் பணி பத்தாண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளது.
அந்த பணியிடத்தை நிரப்புவதற்காக 2015 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அப்போது அந்தப் பணியிடம் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அப்போது நியமனம் நடைபெறவில்லை. 2015 ஆம் ஆண்டில் அருந்ததியருக்கு ஒதுக்கப்பட்ட பணி இப்போது பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டது எப்படி? என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், அதன் தவறுகளுக்கு துணை போகும் அரசும் தான் விளக்க வேண்டும்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் முதல் முறை பொதுப்போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு, பின்னர் காலியான நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிரப்பப்பட்டன. அப்போதும் இந்த பணியிடங்கள் விதிகளுக்கு மாறாக பொதுப்போட்டிக்கு மாற்றப்பட்டன. அதைக் கடுமையாக கண்டித்து 18.09.2022 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டேன். பெரியார் பல்கலையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்திய உயர்கல்வித்துறை கூடுதல் செயலர் பழனிச்சாமி தலைமையிலான விசாரணைக்குழு, இது தவறு என்று அதன் விசாரணை அறிக்கையில் கூறியிருக்கிறது.
அரசின் விசாரணைக் குழுவால் தவறு என்று உறுதி செய்யப்பட்ட சமூகஅநீதியை பல்கலைக்கழக நிர்வாகம் மீண்டும் செய்வதையும், அதை தவறு என்று கூறிய தமிழக அரசு, அத்தவறுக்கு இப்போது ஆதரவு அளித்து அங்கீகரிப்பதையும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூக நீதி சூறையாடல்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறையும், அதனால் நியமிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துணை போவதாகவே கருத வேண்டியுள்ளது. அருந்ததியருக்கு இப்படி ஒரு சமூக அநீதியை இழைத்த தமிழக அரசு, இனி சமூக நீதி குறித்து பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் பணிகளில் அருந்ததியர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. பெரியார் பல்கலைக்கழகம் இப்போது அரங்கேற்றவுள்ள இந்த விதி மீறலால், பட்டியலின அருந்ததியருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இந்த 17 பணியிடங்களும் அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்படுவதற்கு இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்க வேண்டும். சிலரின் சுயநலத்திற்காக மற்றவர்களுக்கான சமூகநீதி பறிக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் சமூக நீதிக்காக உழைத்தவர்களில் முதன்மையானவர் தந்தைப் பெரியார். அவரது பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து சமூக நீதி சூறையாடல்கள் நடைபெறுவதை இனியும் சகித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருமுறையும் இத்தகைய சமூக நீதி சூறையாடல்கள் குறித்து விவாதிக்கப்படுதல், விசாரிக்கப்படுதல் ஆகியவற்றுடன் அந்த குற்றத்தை அரசு கடந்து செல்வதால் தான் இவை அடிக்கடி நிகழ்கின்றன. இத்தகைய சமூக அநீதிகளுக்கு துணைவேந்தரும், பதிவாளரும் பொறுப்பாக்கப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட்டால் தான் இனியும் சமூக அநீதி நடக்காமல் தடுக்க முடியும்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 26 ஆசிரியர் பணியிடங்களை பொதுப் போட்டிப் பிரிவுக்கு ஒதுக்கி ஆட்சிக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பல்கலைக்கழகமும், அரசும் கைவிட வேண்டும். அவற்றில் 17 பணியிடங்களை அருந்ததியர் பிரிவுக்கு ஒதுக்கி ஆள் தேர்வு அறிவிக்கையை வெளியிடுமாறு பல்கலைக்கழகத்தை தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்.
இனி வரும் காலங்களில் நடைபெறவுள்ள பணி நியமனங்களில் 200 புள்ளி ரோஸ்டர் துல்லியமாக பின்பற்றப்படுவதையும், அதற்கான பதிவேடு பராமரிக்கப்படுவதையும் அனைத்துப் பல்கலைக்கழகங்களும், உயர்கல்வித்துறையும் உறுதி செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago