“பாஜகவில் மிகப் பெரிய ஆட்கள் இணைவர்” - அண்ணாமலை விளக்கம் @ இணைப்பு விழா ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

கோவை: “பிரதமர் மோடி தமிழகம் வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக முக்கிய புள்ளிகள் கட்சியில் இணையும் விழா ஒத்திவைக்கப்பட்டது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப் பெரிய ஆட்கள் பாஜகவில் இணைய போகிறார்கள்.” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நேற்று (பிப் 26) நடைபெற இருப்பதாகவும் பாஜகவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நடக்கவில்லை.

இறுதியில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கால அவகாசம், பாதுகாப்பு தேவைப்பட்டதால், அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “பெரிய புள்ளி ஒருவர் மட்டும் இல்லை. நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள். நாங்கள் சொல்லும் இடத்தில் இணைவார்கள் என்பதில்லை. சிலருக்கு டெல்லி சென்று இணைய வேண்டும் என்பது ஆசையாக உள்ளது.

எங்கள் கட்சியிலும் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். இத்தனை காலம் கட்சிக்காக உழைத்த அவர்களையும் சமாதானம் செய்ய வேண்டும். வெளியே மற்ற கட்சியில் இருந்தவர்கள் வரும்போது எங்கள் கட்சியில் இத்தனை ஆண்டுகள் இருக்கும் தலைவர்களை சமாதானப்படுத்த வேண்டும். ஏனென்றால் வருகிறவர்கள் மிகப்பெரிய ஆளாக இருக்கும்போது இவையெல்லாம் நிகழும். வருபவர்கள் எம்எல்ஏவாகவோ, முன்னாள் எம்எல்ஏவாகவோ இருக்கலாம்.

தற்போது பாஜகவில் இணைபவர்கள், தேர்தலில் நிற்கக்கூடிய வல்லமை பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கான இடத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அவர்களை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வந்தபிறகு அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்று கட்சித் தலைமை விரும்பியது.

மேலும் பிரதமர் மோடி தமிழகம் வருவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக முக்கிய புள்ளிகள் கட்சியில் இணையும் விழா ஒத்திவைக்கப்பட்டது. பொறுத்திருந்து பாருங்கள், மிகப்பெரிய ஆட்கள் பாஜகவில் இணைய போகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை நாங்கள் யாரையும் இணைய கூப்பிடவில்லை. வருபவர்கள் தானாக வருகிறார்கள். பாஜகவை மதிக்கவே மாட்டோம் என்று சொன்ன அதிமுக காலையில் இருந்து இரவு வரை பாஜக, பாஜக என கத்திக்கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE