பாஜக கூட்டணியில் தமாகா இணைந்தது ஏன்? - ஜி.கே.வாசன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகா இணைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை தமாகா சந்திக்கிறது. கட்சி நிர்வாகிகளுடன் முறையாக கேட்டு ஆலோசனை நடத்தி மக்கள் நலன், கட்சி நலன், வளமான தமிழகம் - வலிமையான பாரதம், தமிழக மக்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள கட்சி, தமிழர்களுக்காக மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு பாஜக கூட்டணியில் இணைகிறோம்.

இந்திய பொருளாதாரம், இந்திய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுத்து வருவதால், அதை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் எண்ணிக்கை என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைத்திருக்கிறோம்.

மத்தியில் 2 முறை ஆட்சியை பிடித்த கட்சி பாஜக என்பதை தமிழக வாக்காளர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரம், ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் ஏற்பட்டிருக்கிறது.

பாஜக ஆட்சி அமைந்தால் நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும், வளர்ச்சி தொடரும், ஏழ்மை குறையும். அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். பாஜக கூட்டணியில் பல கட்சிகள் சேர வேண்டும். எதிரிகளை வீழ்த்துவது தொடர்பாக கூட்டணியில் இருந்த கட்சிகளுடன் கலந்துரையாடியதில் தவறு ஏதும் இல்லை.

அனைவரும் ஒத்த கருத்துடன் செயல்பட்டால் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற முடியும். எங்கள் விருப்பமான சின்னம் சைக்கிள் சின்னம். அதை பெற முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, தமாகா மூத்த தலைவர்கள் முனவர் பாஷா, சக்தி வடிவேல், விடியல் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அண்ணாமலை சந்திப்பு: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனனுடன் சென்று தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நேற்று நேரில் சந்தித்தார். அப்போது, பல்லடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் என் மண், என் மக்கள் நடைபயண நிறைவுவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிகே.வாசனிடம் அரசியல் ஆலோசனை பெறக்கூடிய நபர்களில் நானும் ஒருவன். பொய் சொல்ல தெரியாத நேர்மையானவர். தமிழகத்தில் வாசனின் வழிகாட்டுதல் அடுத்த 100 நாட்களுக்கு தேவைப்படுகிறது.

வாசனின் ஆலோசனையின் பேரில் வலுவான பாஜக கூட்டணி அமையும். வாசன் தனது மனதுக்கு சரி என்று பட்டதின்படி, கடந்த 6 மாதங்களாக முயற்சி ஒன்றை முன்னெடுத்தார்.

அவருடைய அரசியல் கண்ணோட்டம் வித்தியாசமானது. பாஜக கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் மாற்றத்துக்கான அடிக்கலை நாட்டி இருக்கிறார். கொள்கைக்காக கட்சி நடத்தும் வாசன், பேரம் பேச மாட்டார். அவருக்கு அரசியல் வியாபாரம் செய்ய தெரியாது.

திமுக தனது சாதனையை கூறி வாக்கு சேகரிக்கவில்லை. எதிர்மறை கருத்துகளை பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால் நாங்கள் 10 ஆண்டு சாதனையை கூறி, 3-வது முறை ஆட்சியமைக்க வாய்ப்பு கேட்கிறோம்.

பாஜக குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தை இந்த தேர்தலில் உடைப்போம். எதிர்க்கட்சிகள் பேசக்கூடிய எல்லா குற்றச்சாட்டுகளும் வரும் காலங்களில் காணாமல் போய்விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE