சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், புதிதாக கட்டப்பட்ட கருணாநிதி நினைவிடம் மற்றும் அவர்களது சிலைகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி தனது 95-ம் வயதில் காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திமுக வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியமைந்த நிலையில், கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, அண்ணா நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு, கருணாநிதி நினைவிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8.57 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இரு தலைவர்களின் நினைவிடங்களையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார்.
முன்னதாக, மாலை 6.55 மணிக்கு நினைவிட பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தார். அவரை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். அமைச்சர் துரைமுருகன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோரும் முதல்வருடன் வந்தனர்.
» ‘கோடிங் கற்க வேண்டிய அவசியமில்லை’ - ஏஐ காரணம் அடுக்கும் என்விடியா சிஇஓ
» வெறுப்புப் பேச்சு சம்பவங்களில் பாஜக ஆளும் மாநிலங்களில் 75% பதிவு: ஆய்வுத் தகவல்
தொடர்ந்து, நுழைவுவாயில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு முதல்வர் வந்தார். அங்கு, திராவிடர் கழகதலைவர் கி.வீரமணி, நடிகர் ரஜினிகாந்த், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, கூட்டணி கட்சித் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வைகோ (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்), முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), திருமாவளவன் (விசிக), ஜவாஹிருல்லா (மமக), காதர் மொய்தீன் (ஐயூஎம்எல்) உள்ளிட்டோரை முதல்வர் வரவேற்றார். கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பிறகு, முதல்வர் ஸ்டாலின் குரலில், கருணாநிதியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அனைவரும் உள்ளே சென்றனர். நுழைவுவாயிலை கடந்ததும், அமர்ந்த நிலையில் புத்தகம் படிப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலையின் அருகே முதல்வர், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிறகு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பேட்டரி காரில் ஏறி, அண்ணா நினைவிட பகுதிக்குவந்தனர். மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்களும் அங்கு வந்தனர்.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை: ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ள, அணையா விளக்குடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், புதிதாக கட்டப்பட்ட கருணாநிதி நினைவிடம் முன்பு, பேனாவால் எழுதுவது போன்று அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, கருணாநிதி சதுக்கம் அமைக்கப்பட்ட பகுதிக்கு முதல்வர், கூட்டணி கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் சென்றனர்.
‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகத்துடன் கூடிய கருணாநிதி சதுக்கத்தில், முதல்வர் உள்ளிட்ட அனைவரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சதுக்கத்தின் பின்புறம், வியட்நாம் மார்பிள் சுவரில் வண்ண கற்களால் கருணாநிதி முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இரவில் இந்த சுவரின் பின்னால் ஒளிரும் விளக்கு மூலம், கருணாநிதியின் உருவம் முழுமையாக ஒளி வெள்ளத்தில் தெரியும் வகையிலும், சுற்றிலும் பொன்னிறத்தில் நட்சத்திரங்கள் தெரியும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நின்று அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
நவீன தொழில்நுட்பத்துடன்.. பிறகு, சதுக்கத்தின் கீழே நிலவறையில் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில்அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துஉள்ளே சென்று பார்வையிட்டார்.
இப்பகுதியில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள், திட்டங்கள், திரை பயண புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், 3டி, 7டி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருணாநிதியின் ஆரம்ப காலம் முதல், அரசியல் வாழ்க்கை வரையிலான நிகழ்வுகளின் முக்கிய அம்சங்கள் திரை வடிவிலும், நிழல் வடிவிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை நடிகர் ரஜினிகாந்த், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
முன்னதாக, கருணாநிதி நினைவிடத்தை வடிவமைத்த பிஎஸ்கே கட்டுமான நிறுவன உரிமையாளர் அருண்குமார் உள்ளிட்டோரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித் துறை செயலர் பி.சந்திரமோகன், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago