விஜயதரணி ராஜினாமாவைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி காலியானது: தேர்தல் ஆணையத்துக்கு பேரவை செயலகம் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி வெற்றி பெற்ற விளவங்கோடு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதையடுத்து, மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவாக விஜயதரணி இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இவர் சமீபத்தில், பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, பேரவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பினார். காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகையும், விஜயதரணியை கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும்படி பேரவைத்தலைவருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து, விஜயதரணியின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பேரவைத்தலைவர் மு.அப்பாவு நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம், நேற்று காலை விளவங்கோடு மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்டு வென்ற, திருக்கோவிலூர் தொகுதிகள் தொடர்பாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தகவல் வந்ததா என கேட்டபோது, “இரு தொகுதிகள் தொடர்பாக தகவல் ஏதும் வரவில்லை. உடனே அனுப்ப வேண்டும் என்ற காலவரையறை ஏதும் இல்லை. நாங்கள் கேட்கவும் முடியாது. கடிதம் வந்தால் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக காலியிடம் குறித்து அறிவிக்கும். தொகுதி காலியாக இருந்தால் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்றார்.

இந்நிலையில், நேற்று மாலை, விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதம் விரைவில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் பட்சத்தில், தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். தொடர்ந்து, மக்களவை தேர்தலுடனேயே, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

முன்னதாக, அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அவர் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார். இருப்பினும் நீதிமன்றம் மேல்முறையீட்டுக்கான அவகாசம் வழங்கியது. இதனால், அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டாலும், எம்எல்ஏக்கள் பட்டியலில் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE