பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியை தடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் ஆந்திர அரசு தீவிரம் காட்டிவரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் என கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்காக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார். ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.

இந்நிலையில் புதிய அணை கட்டுவது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயலாகும். இதனிடையே தடுப்பணை தொடர்பான உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்றும் ஆந்திர மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுத்து பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே ஆந்திர மாநிலத்தில் 21 தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடு செய்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஆந்திர முதல்வர் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்ற வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர அரசின் திட்டத்தை தடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசும் தமிழக விவசாயிகளை வஞ்சித்து வரும் நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசும் தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பாலைவனமாக்கும் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE